2011-07-09 16:02:07

ஜூலை 10, வாழந்தவர் வழியில்...


கறுப்பின மக்கள் கடின உழைப்புக்கு, அதுவும் அடிமைகளாக உழைப்பதற்கு மட்டுமே உரியவர்கள் என்ற குறுகிய கண்ணோட்டத்தை உடைத்து, அவர்களும் மற்றத் துறைகளில் சிறந்து விளங்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தவர்களில் ஒருவர் ஆர்தர் ஆஷ். (Arthur Ashe)
கருப்பினத்தைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ், 1943ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெர்ஜீனியா மாநிலத்தில் ரிச்மன்ட் என்ற இடத்தில் பிறந்தார். வெள்ளையினத்தவரே பெரும்பாலும் விளையாடி, வெற்றிபெற்று வந்த டென்னிஸ் விளையாட்டில் தன் திறமையை நிலைநாட்டியவர் ஆர்தர் ஆஷ்.
1968ம் ஆண்டு, இவரது 25வது வயது முதல் 1979ம் ஆண்டு, 36வது வயது வரை பல போட்டிகளில் இவர் வெற்றி பெற்றார். டென்னிஸ் போட்டிகளில் தலை சிறந்த விருதுகளான விம்பிள்டன், ஆஸ்திரேலியக் கோப்பை, அமெரிக்கக் கோப்பை ஆகியவைகளை இவர் வென்று, உலகை வியப்பில் ஆழ்த்தினார்.
இவர் வாழ்ந்த காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் கறுப்பினத்தவர் தங்கள் குடியுரிமைக்கென போராடி வந்த காலம். சமயம் கிடைத்தபோதெல்லாம் இவர் அனைத்து மனிதரும் சமமெனும் உண்மைகளைப் பேசினார். இவருக்கு நடந்த இதய அறுவைச் சிகிச்சையில் HIV கிருமிகள் கலந்த இரத்தம் இவருக்கு அளிக்கப்பட்டதால், இவர் AIDS நோயால் தாக்கப்பட்டு, 1993ம் ஆண்டு தன் 50ம் வயதில் காலமானார்.
அமெரிக்காவின் தலை சிறந்த விருதான அமெரிக்க அரசுத் தலைவரின் விடுதலைப் பதக்கம் இவரது மரணத்திற்குப் பிறகு அதே ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.