2011-07-09 15:59:21

இந்தியாவில் 4 ஆண்டில் வறுமை பாதியாகக் குறையும் – ஐ.நா


ஜூலை09,2011. இந்தியாவில் அடுத்த 4 ஆண்டில் கடும் ஏழைகள் எண்ணிக்கை பாதியாகக் குறையும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
மில்லென்யம் வளர்ச்சி இலக்குகள் என்ற கொள்கை குறித்து தனது ஆண்டு அறிக்கையை வெளியிட்ட ஐ.நா. நிறுவனம், உலக அளவில் வறுமை ஒழிப்பில் இந்தியாவும், சீனாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை பல நாடுகளில் வேகமாக குறைந்து வருகிறது என்று கூறியது.
1990 முதல் 2005 வரை 15 ஆண்டுகளில் இந்தியா, சீனா நாடுகளில் மட்டும் 45.5 கோடி பேர் வறுமைக்கோட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். 2015ல் மேலும் 32 கோடிப்பேர் ஏழ்மையில் இருந்து விடுபடுவார்கள். இந்தியாவில் 1990ம் ஆண்டில் ஏழைகள் எண்ணிக்கை 51 விழுக்காடாக இருந்தது. அது 2015ம் ஆண்டில் 22 விழுக்காடாகக் குறையும். அதாவது, 1990ல் ஏழைகளாக இருந்தவர்கள் எண்ணிக்கையில் பாதிப் பேர் மட்டுமே வறுமை கோட்டுக்குள் இருப்பார்கள் என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.
வறுமை, பசி, பட்டினி, ஆண், பெண் சமநிலை, குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்தல், பிரசவகால மருத்துவ வசதியை முன்னேற்றுதல், எச்ஐவி/எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் அடிப்படையில் நாடுகளின் நிலை என்ன என்றும் ஆராயப்பட்டது. இந்தியாவில் பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும் நிலையிலும், பணக்காரர்கள் மேலும் வளமையாகவும், ஏழைகள் விடுபட்டவர்களாகவும் நீடிக்கும் நிலை உள்ளது. இவ்வாறு ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.