2011-07-08 16:22:54

தென் சூடான் நிகழ்ச்சியில் திருத்தந்தையின் பிரதிநிதி குழு


ஜூலை08,2011. ஜூலை 09, இச்சனிக்கிழமையன்று Juba நகரில் இடம் பெறும் தென் சூடான் புதிய குடியரசாக அறிவிக்கப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்குத் திருத்தந்தை தனது பிரதிநிதி குழுவை அனுப்புகிறார் என்று திருப்பீடப் பேச்சாளர் அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
கென்ய ஆயர் பேரவையின் தலைவரும் நைரோபி பேராயருமான கர்தினால் John Njue தலைமையிலான இப்பிரதிநிதி குழுவில் சூடானுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் லியோ பொக்கார்தி, கென்யத் திருப்பீடத் தூதரகச் செயலர் பேரருட்திரு ஹாவியர் ஹெரெரா கொரோனா ஆகியோர் உள்ளனர்.
இத்திருப்பீடப் பிரதிநிதி குழு, தென் சூடான் புதிய நாட்டின் அதிகாரிகளுக்கும் அந்நாட்டின் குடிமக்களுக்கும் அமைதியும் வளமையும் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பர் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
1972ம் ஆண்டு முதல் பழைய சூடானுடன் அரசியல் உறவைக் கொண்டுள்ள திருப்பீடம், இப்புதிய குடியரசு விண்ணப்பித்தால் அது குறித்துத் தகுந்த கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.
சூடானில் தெளிவாகத் தெரியும் பிரச்சனைகள், திறந்த மனதுடனான அமைதியுடன்கூடிய உரையாடல் வழி தீர்க்கப்பட சர்வதேச சமுதாயம் உதவுமாறு திருப்பீடம் அழைப்பு விடுப்பதாகவும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
இதன்மூலம் சூடான் மக்கள் அமைதி, சுதந்திரம், வளர்ச்சி ஆகியவற்றை அனுபவிக்க இயலும் என்றும் அவர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.