2011-07-07 15:30:48

திருச்சபை நடத்தும் பள்ளிகளுக்கு அரசின் நிதி ஆதரவு தேவைப்படுகின்றது - பேராயர் தொமாசி


ஜூலை07,2011. வளர்ச்சிக்குத் திறவுகோலாக இருக்கும் கல்விக்கு, மற்ற சமூக நிறுவனங்களைப் போலவே, சமய நிறுவனங்களும் தங்கள் பங்கை ஆற்ற இயலும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.பொருளாதார மற்றும் சமூக அவையின் உயர்மட்ட அளவிலானக் கூட்டத்தில் இப்புதன்கிழமை உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி இவ்வாறு தெரிவித்தார்.
உலகில் சிறாருக்குத் தரமான கல்வி வழங்குவதில் ஒவ்வொரு நாட்டிற்கும் தவிர்க்கமுடியாத கடமை ஒரு பக்கம் இருக்கின்ற போதிலும், இந்தப் பணியைப் பெற்றோரும், திருச்சபைகளும், உள்ளூர் சமூகங்களும் செய்ய வேண்டிய கடமையையும் கொண்டுள்ளன என்றார் பேராயர் தொமாசி.
2011ம் ஆண்டின் உலகக் கண்காணிப்பு அறிக்கையின்படி, 2008ல் சுமார் 6 கோடியே 75 இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்லாமல் இருந்தனர் என்பதைச் சுட்டிக் காட்டிய பேராயர், இந்த நிலைமை தொடர்ந்தால் 2015க்குள் உலக அளவில் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி என்ற திட்டத்தைச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரித்தார்.
மிகவும் வளர்ச்சி குன்றிய நாடுகளில் மூன்று நாடுகளில் பள்ளிக்குச் செல்லும் சிறார் 50 விழுக்காட்டுக்கும் குறைவாகவும் 17 நாடுகளில் இவ்விகிதம் 80 விழுக்காட்டுக்கு அதிகமாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நூற்றாண்டுகளாக, சமயக் குழுக்கள் அடிப்படை கல்விக்கு ஆதரவளித்து வருகின்றன என்றும் எடுத்துக்காட்டாக, கத்தோலிக்கத் திருச்சபை ஒவ்வொரு கண்டத்திலும் சுமார் இரண்டு இலட்சம் ஆரம்ப மற்றும் நடுத்தரப் பள்ளிகளை நடத்துகின்றது, இவற்றில் சுமார் 5 கோடியே 80 இலட்சம் மாணவர்களும் 35 இலட்சம் ஆசிரியர்களும் இருக்கின்றனர் என்றும் பேராயர் தொமாசி கூறினார்.
மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஏறக்குறைய 2 கோடியே 80 இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
உலக அளவில் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு அரசுகளும் தனியார் அமைப்புகளும் தங்களது நிதியுதவிகளை அதிகரிக்குமாறும் பேராயர் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.