2011-07-07 15:31:51

அசிசியில் இடம்பெற உள்ள அனைத்து மதங்களின் கூட்டம் குறித்து திருப்பீடச்செயலர்


ஜூலை 07, 2011. அக்டோபர் மாதம் 27ந்தேதி இத்தாலியின் அசிசியில் இடம்பெறவிருக்கும் அனைத்து மதங்களின் கூட்டத்திற்கு எடுக்கப்பட்டுள்ள தலைப்பான 'உண்மைக்கான திருப்பயணிகள், அமைதிக்கானத் திருப்பயணிகள்', என்பதே அந்நிகழ்வின் முழுப்பொருளையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என்றார் திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து மதத்தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து அவர்களோடு இணைந்து செபித்த 1986ம் மற்றும் 2002ம் ஆண்டுகளின் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வு, இவ்வுலகிற்கானப் பொது அர்ப்பணத்தில் மதங்கள் தங்களிடையே ஒருவித இணக்கத்தைக் காணமுடியும் என்பதன் நிரூபணமாக இருக்கும் என்றார் கர்தினால் பெர்த்தோனே.
இவ்வாண்டு அக்டோபரில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள, விஞ்ஞான மற்றும் கலாச்சாரத் துறையில் பணியாற்றும் இறைநம்பிக்கையற்றவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளதாகவும் கூறினார் அவர்.
அமைதிக்கான அர்ப்பணம் என்பது மதங்களுக்கு மட்டுமே உரியது அல்ல, மாறாக அனைத்து மக்களுக்கும் உரியது என்பதை வலியுறுத்தும் விதமாகவே அனைவருக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளதாக மேலும் கூறினார் திருப்பீடச்செயலர் கர்தினால் பெர்த்தோனே.








All the contents on this site are copyrighted ©.