2011-07-06 15:47:20

சுற்றுலாப் பயணிகள், தாங்கள் செல்லும் நாடுகளின் பழக்கவழக்கங்களை முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும் - திருப்பீட குடியேற்றதாரர் அவை


ஜூலை06,2011. சுற்றுலாப் பயணிகள் புனித இடங்களைப் பார்வையிட வரும் போது, அவ்விடங்கள் இயேசு கிறிஸ்துவை அறிவிப்பதற்கு வெளிப்படையான தளமாக அமைகின்றன என்று திருப்பீடம் கூறியது.
வருகிற செப்டம்பர் 27ம் தேதி சிறப்பிக்கப்படும் அனைத்துலக சுற்றுலா தினத்தை முன்னிட்டுச் செய்தி வெளியிட்ட திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்வோர்க்கான அவை, சுற்றுலாப் பயணிகள் புனித இடங்களுக்கு வரும் போது அவர்கள் கிறிஸ்துவை அதிகமாக அறிந்து அன்பு செய்வதற்கு நாம் எவ்வாறு உதவு முடியும் என்பதையும் விளக்கியுள்ளது.
இக்காலத்தில் ஒன்பது கோடிக்கு மேற்பட்ட மக்கள் சர்வதேச அளவில் பயணம் செய்கின்றனர் என்றும், இவ்வகையில் சுற்றுலா, கலாச்சாரங்களுக்கிடையே இருக்கும் தடைகளை உடைத்து சகிப்புத்தன்மை, மதிப்பு, ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றை வளர்க்கின்றது என்றும் அச்செய்தி கூறுகின்றது.
பிளவுண்டுள்ள இன்றைய நமது உலகு அமைதியான ஓர் எதிர்காலம் நோக்கிச் செல்வதற்கு இம்மதிப்பீடுகள் படிக்கற்களாக அமைகின்றன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
சுற்றுலா செல்லும் நாடுகளின் தனிப்பட்ட இயல்பு, சட்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை மதிக்கும் வகையில் சுற்றுலாக்களைத் தயார் செய்பவர்கள் பயணிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும், அதேசமயம், சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நாடுகளும் அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் வாழ்க்கைமுறையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அச்செய்தி கூறுகிறது.
2011ம் ஆண்டின் சுற்றுலா தினத்திற்குரிய செய்தியில் திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்வோர்க்கான அவைத் தலைவர் பேராயர் அந்தோணியோ மரிய வெலியோ, செயலர் ஆயர் ஜோசப் கலத்திப்பரம்பில் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.