2011-07-06 15:48:15

சீனாவிலுள்ள கத்தோலிக்கத் திருச்சபை, திருச்சபையின் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் - திருப்பீடம்


ஜூலை06,2011. “கத்தோலிக்கமாக” இருக்கும் திருச்சபையைச் சீனா விரும்பினால் அது திருச்சபையின் கோட்பாடுகளையும் ஒழுங்கு விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று திருப்பீடம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
சீனாவில் கடந்த மாதம் 29ம் தேதி அருட்பணி பால் லெய் ஷியின், திருத்தந்தையின் ஒப்புதலின்றி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டதற்குப் பதிலளிக்கும் விதமாக இந்த அறிக்கையை வெளியிட்டது திருப்பீடம்.
இதேபோன்ற ஆயர் திருநிலைப்பாடு, கடந்த நவம்பரிலும் இடம் பெற்றது.
அருட்பணி பால் லெய் ஷியின், ஆயராகப் பணியாற்றுவதற்குரிய நபர் என்பது கனமான காரணங்களினிமித்தம் திருப்பீடத்தால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாக இருக்கின்றது என்பது, சில காலத்திற்கு முன்னரே அவருக்கு அறிவிக்கப்பட்டது என்பதையும் அவ்வறிக்கைச் சுட்டிக் காட்டுகிறது.
திருத்தந்தையின் ஒப்புதலின்றி நடைபெற்றுள்ள லெய் ஷியினின் ஆயர் திருநிலைப்பாடு, திருச்சபை சட்டத்திற்குப் புறம்பானது, எனவே லெய் ஷியின், கத்தோலிக்க மறைமாவட்டத்தை நிர்வாகம் செய்வதற்கு எந்தவித அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை, இவர் லெஷென் மறைமாவட்ட ஆயர் என்பதைத் திருப்பீடம் அங்கீகரிக்கவில்லை என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
திருச்சபை சட்டம் 1382ன்படி, திருத்தந்தையின் ஒப்புதலின்றி ஒருவரை ஆயராகத் திருநிலைப்படுத்தும் ஓர் ஆயரும், அந்த ஆயர் திருநிலைப்பாட்டை பெறும் நபரும் திருச்சபைக்குப் புறம்பாக்கப்படுகின்றனர் என்பதையும் அவ்வறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.
சீனாவிலுள்ள கத்தோலிக்கத் திருச்சபை மீது திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்பதும், கடந்த மே 24ம் தேதி சீனத் திருச்சபைக்காகச் சிறப்பாகச் செபிப்பதற்குத் திருத்தந்தை அழைப்பு விடுத்து செபித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.