2011-07-06 15:53:22

காவல்துறை, நீதிமன்றங்கள், நீதித்துறை போன்றவை பெண்கள் விடயத்தில் தவறுகின்றன – ஐ.நா.


ஜூலை06,2011. உலகில் வேலை செய்யும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பற்ற வேலைகளில் உள்ளனர், இவர்களுக்குப் பல நேரங்களில் தொழிற்சட்டங்களின் பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது என்று ஐ.நா.வின் புதிய பெண்கள் நிறுவனம் வெளியிட்ட முதல் அறிக்கை கூறுகின்றது.
வீட்டு வன்முறை 125 நாடுகளில் சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தாலும், இத்தகைய வன்முறை, குற்றம் என்று கணிக்கப்படாத நாடுகளில் அறுபது கோடியே முப்பது இலட்சம் பெண்கள் வாழ்கின்றனர், சட்ட அமைப்பாளர்களில் குறைந்தது முப்பது விழுக்காட்டினரைச் பெண்களாகக் கொண்ட நாடாளுமன்றங்கள் 28 நாடுகளில் மட்டுமே இருக்கின்றன என்று அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
“உலகப் பெண்களின் முன்னேற்றம் : நீதிக்கான தேடலில்” என்ற தலைப்பில் ஐ.நா.பெண்கள் நிறுவனம் இப்புதனன்று வெளியிட்ட 169 பக்க அறிக்கையில், 139 நாடுகளும் பிரதேசங்களும் அரசியல் அமைப்புகளில் பாலினச் சமத்துவத்திற்கு உறுதி அளித்துள்ளன என்று கூறியது.
53 விழுக்காட்டு வேலை செய்யும் பெண்கள், அதாவது சுமார் 60 கோடிப் பேர் தொழிற்சட்டங்களால் பாதுகாக்கப்படாத நிலையில் உள்ளனர் எனவும், பெண்கள் சார்ந்த சட்டங்கள் தாளில் எழுதப்பட்டவைகளாக மட்டுமே இருக்கின்றன எனப் பல பெண்கள் உணருவதாகவும் அவ்வறிக்கை குறை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.