2011-07-05 16:50:17

விவிலியத் தேடல் - திருப்பாடல் 49


RealAudioMP3 வத்திக்கானிலிருந்து வெளியாகும் L'Osservatore Romano செய்தித்தாளில் ஒரு மாதத்திற்கு முன் முதல் பக்கத்தில் வெளியாகி இருந்த ஒரு படம் என் கவனத்தை ஈர்த்தது. லிபியாவில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அது. அந்நாட்டில் கடந்த சில மாதங்களாய் நடந்து வரும் போரைக் குறித்து எத்தனையோ செய்திகளை, கட்டுரைகளை வாசித்துள்ளேன், இந்தப் படம் அந்தக் கட்டுரைகளை விட சக்தி வாய்ந்த செய்தியை எனக்குச் சொன்னது. ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளைச் சொல்லும் என்று சும்மாவா சொன்னார்கள்!
இன்று நாம் சிந்திக்கவிருக்கும் திருப்பாடல் 49ஐ நான் வாசித்தபோது, இந்தப் படம் என் மனதில் தோன்றியது. நான் பார்த்த அந்தப் படத்தை வார்த்தைகளால் ஓரளவு விவரிக்க முயல்கிறேன். குண்டுகளால் தாக்கப்பட்டு, பாழடைந்திருந்த ஒரு கட்டிடத்திற்கு அருகே இராணுவ Tank ஒன்று இருந்தது. அந்த Tankம் ஓரளவு பழுதடைந்திருந்தது. அந்த Tankன் மேல் நான்கு சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். ஏழ்மையான உடை அணிந்திருந்த அவர்களுக்கு வயது 12 அல்லது 13 இருக்கும். அவர்கள் நால்வரும் தங்கள் வலது கையால் வெற்றி என்ற அடையாளத்தைக் குறிக்கும் V எழுத்தைக் காட்டிய வண்ணம் நின்றனர். V என்ற இந்த எழுத்தை இருவிரல்களால் காட்டுவது வெற்றியைக் குறிக்கும், அல்லது, சமாதானத்தையும் குறிக்கும். இந்த நான்கு சிறுவர்களும் Tank மீது ஏறி நின்று வெற்றியைக் கொண்டாடினார்களா? அல்லது Tankஐ வைத்து எங்கள் நாட்டை அழித்தது போதும், எங்களுக்குச் சமாதானத்தைத் தாருங்கள் என்று சொன்னார்களா? என்று தெரியவில்லை.
Tank மீது அவர்கள் நின்று, பெருமிதத்துடன் சிரித்து கொண்டிருந்தார்கள். ஏதோ அவர்கள் அந்த Tankஐயும் இந்த உலகத்தையும் வென்றவர்கள் போல் 'போஸ்' கொடுத்தனர். பழுதடைந்து நிறுத்தப்பட்டிருந்த அந்த Tank அவர்களது அல்ல, அவர்கள் வெற்றியும் பெறவில்லை, அவர்கள் இருந்த சூழலும் நிரந்தரமான சூழல் கிடையாது. இருந்தாலும், அந்த நொடிப்பொழுதில் அவர்களுக்குப் பெரும் சக்தி உண்டானது போல் இருந்திருக்க வேண்டும். உலகச் செல்வங்களுக்கு இதையொத்த மந்திர சக்தி உண்டு. இந்த உலகின் செல்வங்கள் நிலையானவை அல்ல என்று தெரிந்தும், அதன் மந்திர சக்தியில் பிடியுண்டிருக்கும் நம்மைப் பற்றிய ஒரு திருப்பாடலே 49ம் திருப்பாடல்!
பணம் பத்தும் செய்யும்.
பணம் பாதாளம் வரை பாயும்.
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும்.
பணத்தின் சக்தியைப் பறைசாற்றும் இந்தப் பழமொழிகள் எல்லாமே சொல்ல வருவது என்ன? பணம் இந்த உலகை மட்டுமல்ல மூவேழு உலகையும் ஆளும் சக்தி பெற்றது என்ற எண்ணத்தை விதைக்கும் பழமொழிகள் இவை. இந்த எண்ணத்தில் ஊறியிருக்கும் இவ்வுலக மக்களுக்கு, நமக்கு, திருப்பாடல் ஆசிரியர் இப்பாடல் வழியே அறிவுரை கூறுகிறார். இதை ஓர் எச்சரிக்கை என்று கூடச் சொல்லலாம்... இந்தத் திருப்பாடலின் தலைப்பு - செல்வம் பயன் அற்றது.
இந்தத் தலைப்பைக் கொடுத்திருப்பதால், இத்திருப்பாடல் செல்வந்தர்களுக்கு மட்டும், அல்லது செல்வத்தை நம்பியிருப்பவர்களுக்கு மட்டும் என்று எண்ண வேண்டாம். நமது சந்தேகத்தை, திருப்பாடலின் ஆசிரியர் இப்பாடலின் முதல் மூன்று திருவசனங்களில் தீர்த்து வைக்கிறார். தான் சொல்லப்போவது மிக முக்கியமானதென்று அறிவிப்பதுபோல் இந்த முதல் மூன்று இறைவசனங்கள் அமைந்துள்ளன.
அரசன் ஒருவர் முக்கியமானச் செய்தியை மக்களுக்கு அறிவிக்கும்போது, தண்டோரா போட்டு அறிவிப்பார் என்று அறிவோம். "இதனால் அனைத்து மக்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..." என நீட்டி முழக்கி ஒலிக்கும் அந்தப் பாணியில் இத்திருப்பாடலின் முதல் வரிகள் ஆரம்பமாகின்றன.
திருப்பாடல் 49 1-3
மக்களினங்களே! அனைவரும் இதைக் கேளுங்கள்: மண்ணுலகில் வாழ்வோரே, யாவரும் செவிகொடுங்கள். தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வர்களே, ஏழைகளே, அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள். என் வாய் ஞானமிகு சொற்களை உரைக்கும்: என் மனம் விவேகமானவற்றை ஆழ்ந்து சிந்திக்கும்.
150 திருப்பாடல்களில் மக்களே, மக்களினத்தாரே என்று துவங்கும் திருப்பாடல்கள் ஏழு மட்டுமே. (29, 33, 47, 49, 78, 100, 117) திருப்பாடல் ஆசிரியர் மக்களை இவ்விதம் அழைக்கும்போது, ஒன்று அவர்களுக்கு அறிவுரை வழங்கும் வரிகள் தொடரும், அல்லது, அவர்களைத் தன்னுடன் இணைந்து கடவுளைப் புகழச் சொல்வார் ஆசிரியர். மற்ற ஆறு திருப்பாடல்களில் இத்தனை விரிவாக மக்களினத்தை ஆசிரியர் அழைக்கவில்லை. இந்தத் திருப்பாடலில் செல்வத்தைப் பற்றி அவர் சொல்ல வந்துள்ள கருத்து ஏழை, பணக்காரர், இளையோர், வயது முதிர்ந்தோர் என்று அனைவரையும் பாதிக்கும் ஓர் உண்மை என்பதால், ஒரு முக்கிய அறிவிப்பைப் போன்று ஆரம்பிக்கிறார்.
மனிதரின் இறுதி முடிவு, கல்லறை ஆகிய கோணங்களில் இருந்து செல்வத்தைத் தியானிக்க திருப்பாடல் 49 நம்மை அழைக்கிறது. இந்தத் திருப்பாடலுக்கு பெரும் விளக்கங்கள் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் இதில் கூறப்பட்டுள்ள வரிகள் அனைத்தும் தெளிவான எச்சரிக்கைகளை நமக்குத் தரும் வரிகள். நாம் செய்யக்கூடியதெல்லாம் இந்தத் திருப்பாடலை ஒரு தியானமாக மேற்கொள்வதுதான்.
மனித வாழ்வின் முடிவு பலத் தெளிவுகளை உருவாக்கும் என்பதை வரலாற்றின் பல பக்கங்கள் நமக்குச் சொல்கின்றன. மாவீரன் அலெக்சாண்டர் தான் இறப்பதற்கு முன் தன் தளபதிகளிடம் தனது மூன்று இறுதி ஆசைகளை வெளியிட்டார் என்று வாசிக்கின்றோம்.
“நான் இறந்ததும், எனக்கு மருத்துவம் பார்த்தவர் என் சவப்பெட்டியை தனியே எடுத்து வரச் சொல்லுங்கள். இது என் முதல் ஆசை. இரண்டாவது ஆசை... நான் வாழ்வில் திரட்டிய அத்தனை தங்கம், வெள்ளி, மற்ற விலையுயர்ந்த கற்கள் அனைத்தையும் என் இறுதி ஊர்வலத்தின்போது பாதையில் அள்ளித் தெளித்து விடுங்கள். என் இறுதி ஆசை இதுதான்... சவப்பெட்டிக்கு வெளியே என் இரு கைகளையும் வைத்து என்னை நீங்கள் புதைக்க வேண்டும்” என்று தன் மூன்று ஆசைகளையும் வெளியிட்டார் அலெக்சாண்டர்.
இந்த ஆசைகளை நிறைவேற்றுவதாகச் சொன்ன தளபதிகள், அவரிடம் இப்படிப்பட்ட ஆசைகள் எழக் காரணம் என்ன என்று கேட்டனர்.
“நான் கற்றுக்கொண்ட பாடங்கள் சிலவற்றை மக்களுக்கு விட்டுச் செல்ல விழைகிறேன்.” என்று கூறிய அலெக்சாண்டர், தனது இறுதி ஆசைகளுக்கான விளக்கத்தையும் சொன்னார். “நமது மருத்துவர்கள் எவ்வளவுதான் திறமை மிக்கவர்களாயினும், நமது குறிக்கப்பட்ட நேரம் வந்ததும், எந்தத் திறமை வாய்ந்த மருத்துவராலும் நமது உயிரைக் காப்பாற்ற முடியாது. இதுதான் என் முதல் ஆசையின் அர்த்தம்.
நான் வாழ்நாள் முழுவதையும் செல்வங்கள் சேகரிப்பதில் வீணடித்தேன். அதுபோல் என் மக்கள் இருக்கக் கூடாது என்பதே எனது இரண்டாவது ஆசையின் அர்த்தம். மூன்றாவதாக என் வெறுங்கை இந்த உலகிற்குச் சொல்லும் பாடம்... வெறுங்கையுடன் பிறந்தோம், வேறுங்கையுடன்தான் மீண்டும் இவ்வுலகை விட்டு செல்வோம் என்று மக்கள் புரிந்து கொள்ளவே என் வெறுங்கைகளை சவப்பெட்டிக்கு வெளியே மக்கள் பார்வைக்கு வைக்கச் சொல்கிறேன்” என்றார் மாவீரன் அலெக்சாண்டர்.
அலெக்சாண்டரின் இதே எண்ணங்களைத் திருப்பாடல் ஆசிரியரும் சொல்லியிருக்கிறார்.
திருப்பாடல் 49 6-11, 17
தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ தம் செல்வப்பெருக்கைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர். உண்மையில், தம்மைதாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது: தம் உயிரை மீட்க எதையும் கடவுளுக்குத் தர இயலாது. மனித உயிரின் ஈட்டுத்தொகை மிகப் பெரியது: எவராலும் அதனைச் செலுத்த இயலாது. ஒருவரால் என்றென்றும் வாழ்ந்திடமுடியுமா? படுகுழியைக் காணாமல் இருந்திட முடியுமா?... அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப் பிறருக்கு விட்டுச்செல்கின்றனர். கல்லறைகளே! அவர்களுக்கு நிலையான வீடுகள்! அவையே எல்லாத் தலைமுறைக்கும் அவர்கள் குடியிருப்பு! அவர்களுக்குத் தங்கள் பெயரில் நிலபுலன்கள் இருந்தும் பயனில்லை... ஏனெனில் சாகும்போது அவர்கள் எதையும் எடுத்துப் போவதில்லை: அவர்களது செல்வமும் அவர்கள்பின் செல்வதில்லை.
திருப்பாடல் 49ஐ வாசிக்கும்போது, லூக்கா நற்செய்தி 12ம் பிரிவில் இயேசு கூறிய மதிகெட்ட செல்வன் உவமையை என் மனம் எண்ணிப் பார்த்தது. திருப்பாடல் 49ம் இயேசுவின் உவமையும் செல்வம் சேர்ப்பது, அதற்காக உழைப்பது ஆகியவைகளைக் குறித்தக் கண்டனக் குரல்கள் அல்ல. செல்வத்தை நிரந்தரம் என்று நம்பி, அதையே கடவுளாக்கும் முயற்சிகளையே இத்திருபாடலும், இயேசுவின் கூற்றும் கண்டனம் செய்கின்றன. கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே. என்று இயேசு தன் உவமையை முடித்திருக்கிறார்.
அதேபோல் இயேசு "ஏழைகளே, எளியோரே நீங்கள் பேறுபெற்றவர்கள்" என்று சொன்னபோதும், வறுமையை, ஏழ்மையை ஒருவர் தேடிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் கூறவில்லை. வறுமையில் இருக்கும் ஒருவர் செல்வம் இல்லையே என்ற ஏக்கத்தில், கோபத்தில் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிடலாம். அவர்களை பேறுபெற்றவர்கள் என்று இயேசு குறிப்பிடவில்லை. மாறாக, வறியச் சூழலில் வாழ்பவர்கள் தங்களை அதிகம் நம்பி வாழாமல், கடவுளை நம்பி வாழும்போதே அவர்கள் பேறுபெற்றவர்கள் என்பதை வலியுறுத்துகிறார் இயேசு. லூக்கா நற்செய்தியில் இந்த உவமையை முடித்ததும், இயேசு இந்த நம்பிக்கையைப் பற்றியே தொடர்ந்து பேசுகிறார். இயேசு கூறும் சில அற்புதமான அறிவுரைகளோடு நம் தேடலை இன்று நிறைவு செய்வோம்.
லூக்கா 12:22-34
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உயிர்வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர். உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? காகங்களைக் கவனியுங்கள்; அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை; அவற்றுக்குச் சேமிப்பறையுமில்லை, களஞ்சியமுமில்லை. கடவுள் அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா? கவலைப்படுவதால் உங்களுள் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?... நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப் புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் மிகுதியாகச் செய்வார் அல்லவா! ஆதலால் எதை உண்பது, எதைக் குடிப்பது என நீங்கள் தேடிக்கொண்டிருக்க வேண்டாம்; கவலை கொண்டிருக்கவும் வேண்டாம்... உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.”








All the contents on this site are copyrighted ©.