2011-07-05 16:22:31

வத்திக்கானின் ஏறக்குறைய நூறு முக்கிய தொன்மை ஆவணங்கள் முதன் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது


ஜூலை05,2011.வத்திக்கானில் நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்த பல முக்கிய தொன்மை ஆவணங்களில் ஏறக்குறைய நூறு ஆவணங்கள் முதன் முறையாக 2012ம் ஆண்டு பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை உரோம் Capitolini மாநகராட்சி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று அறிவித்தது வத்திக்கான்.
திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே தலைமையிலான குழு இச்செவ்வாய்க்கிழமை நிருபர் கூட்டத்தில் இத்தகவலை வெளியிட்டது.
அறிவியலாளர் கலிலேயோ கலிலியின் கண்டுபிடிப்புகள் குறித்த வத்திக்கானின் நடவடிக்கைகள், இங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்ரியின் திருமணம் குறித்து ஆங்கில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட் எழுதிய கடிதம், பாப்பிறைகளின் தலைமைத்துவம் பற்றி திருத்தந்தை ஏழாம் கிரகரியின் அறிக்கை, இரண்டாம் உலகப் போர் தொடர்புடைய அறிக்கைகள் உட்பட சுமார் நூறு முக்கிய ஆவணங்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்.
“Lux in Arcana” என்ற தலைப்பில் வைக்கப்படும் இவை வத்திக்கான் இரகசிய ஆவணக் காப்பகத்தில் நானூறு ஆண்டுகளாகக் காக்கப்பட்டவை என்றும், இவை, உலகின் மிக முக்கிய ஆவணங்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.