2011-07-05 16:24:23

இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்கள் இந்து மதத்திற்கு மாறி வருகிறார்கள் – கர்நூல் ஆயர்


ஜூலை05,2011. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் அரசின் சலுகைகள் தலித் கிறிஸ்தவர்க்குக் கிடைக்காததால் அவர்களில் பலர் இந்து மதத்திற்கு மாறி வருகிறார்கள் என்று ஆந்திர மாநில ஆயர் ஒருவர் தெரிவித்தார்.
தங்களையொத்த தலித் இந்துக்களுக்குக் கிடைப்பது போன்று கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளும், பிரதிநிதித்துவமும், மற்றும்பிற சலுகைகளும் கிடைக்காததால் பல தலித் கிறிஸ்தவர்கள் மதம் மாறுகிறார்கள் என்று கர்நூல் ஆயர் அந்தோணி பூலா கூறினார்.
ஓர் இந்தியரை முதலில் தனித்துவப்படுத்திக் காட்டுவது அவர் சார்ந்துள்ள இனம் என்றும் ஒருவரின் மதம் அவரின் இனத்தை மாற்றாது என்றும் ஆயர் பூலா மேலும் கூறினார்.
பாரதீய ஜனதா கட்சி தலித் கிறிஸ்தவர்களின் இக்கோரிக்கைக்கு ஆதரவு தர மறுப்பதையும், இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி மௌனம் காப்பதையும் வருத்தத்துடன் தெரிவித்தார் கர்நூல் ஆயர்.
வருகிற ஆகஸ்ட் முதல் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இவ்விவகாரம் குறித்த மசோதா தாக்கல் செய்யப்படுமாறு ஆயர் தனது கோரிக்கையை முன்வைத்தார்.
மேலும், இம்மாதம் 25 முதல் 27 வரை இவ்விவகாரம் குறித்து புது டில்லியில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்படவிருக்கின்றது.







All the contents on this site are copyrighted ©.