2011-07-05 16:19:06

150ம் ஆண்டைச் சிறப்பிக்கும் L'Osservatore Romano வுக்குத் திருத்தந்தை பாராட்டு


ஜூலை05,2011. திருப்பீடச்சார்புத் தினத்தாளான L'Osservatore Romano, விசுவாசிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, கிறிஸ்துவின் அருள்வாக்கு மற்றும் திருச்சபையின் அதிகாரப்பூர்வப் போதனைகளின் ஒளியில் காண உதவுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பாராட்டினார்.
L'Osservatore Romano வத்திக்கான் தினத்தாள் பிரசுரமானதன் 150ம் ஆண்டையொட்டி இச்செவ்வாய்க்கிழமை காலை அத்தினத்தாளின் அலுவலகத்திற்குச் சென்று அதன் பணியாளர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, அத்தினத்தாள் கடந்த 150 ஆண்டுகளில் மைல்கல் பதித்துள்ளது எனப் புகழ்ந்தார்.
அதன் பணியாளர்கள் தங்களது பணியைச் செய்வதற்கு, நவீனத் தொழிட்நுட்பங்களில் போதுமானப் பயிற்சிகளையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்வது மட்டும் போதாது, அத்துடன் செப உணர்வு, சேவை மனப்பான்மை, கிறிஸ்துவுக்கும் அவரது திருச்சபையின் போதனைகளுக்கும் விசுவாசமாக இருப்பது ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
L'Osservatore Romano தினத்தாள், உலகப் பத்திரிகைத் துறையில் ஒரு தனிப்பட்ட இடத்தைக் கொண்டுள்ளது எனவும், மனித மற்றும் கிறிஸ்தவ மதிப்பீடுகளிலிருந்து விலகிச் செல்லக் காரணமாக அமையும் எதிர்மறைச் செய்திகள் மத்தியில் உண்மைகளை எடுத்துரைக்கும் பணியைச் செய்கின்றது எனவும் திருத்தந்தை கூறினார்.
L'Osservatore Romano தினத்தாள் 1861ம் ஆண்டு ஜூலை ஒன்றாந்தேதி பிரசுரமானது.







All the contents on this site are copyrighted ©.