2011-07-04 16:26:21

ஜூலை 05 வாழ்ந்தவர் வழியில்........


“உண்மை என்ற பாறையில் உனது கருத்துக்களைப் பரப்பு”.
“நாம் வாழ்க்கையில் எதை மதிக்கிறோமோ அதைத் தவிர வேறு எதுவும் மதிப்பானது இல்லை”.
இவ்வாறான பல கூற்றுக்களை உதிர்த்தவர் Hazrat Inayat Khan. இவர் உலகளாவிய சூஃபிசத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர். 1914ல் இலண்டனில் “மேற்கில் சூஃபி சபை” என்ற அமைப்பை உருவாக்கியவர். பின்னர், 1923ல் இந்த இலண்டன் சூஃபி சபை கலைக்கப்பட்டு சுவிட்சர்லாந்து சட்டத்தின் கீழ் புதிய நிறுவனமாக உருவாக்கப்பட்டு அனைத்துலக சூஃபி இயக்கம் என அழைக்கப்பட்டது. Hazrat Inayat Khan முதலில் மேலை நாடுகளுக்குச் சென்ற போது இந்திய மரபு இசையின் பிரதிநிதியாகத்தான் சென்றார். ஆனால் விரைவில் சூஃபிசக் கருத்துக்களை வளர்த்து அதை நடைமுறைப்படுத்தினார். இவர் தொடங்கிய நிறுவனத்தின் கிளைகள், இன்று நெதர்லாண்ட்ஸ், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்க ஐக்கிய நாடு கானடா, இரஷ்யா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. Khan, குஜராத் மாநிலத்தின் வாதோதாராவில் முஸ்லீம் பிரபுக்கள் குடும்பத்தில் 1882ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பிறந்தார். இவரது தாய், மைசூர் மகாராஜா திப்பு சுல்தான் பரம்பரையைச் சேர்ந்தவர். இவர் உலகினருக்கு வழங்கிய இறைச்செய்தி, அன்பு, நல்லிணக்கம், அழகு ஆகிய தலைப்புக்களை மையப்படுத்துகின்றது. Hazrat Inayat Khan 1927ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி இந்தியாவில் இறந்தார்.
சூஃபிசம் அல்லது தசவுஃப் என்பது இறைவனை அடையும் வழியைக் கூறும் இசுலாத்தின் உள்ளார்ந்த பரிமாணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த மரபைப் பின்பற்றுபவர்கள் சூஃபிகள் என அழைக்கப்படுகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.