2011-07-04 16:38:06

குஜராத் படுகொலை தொடர்புடைய ஆவணங்கள் அழிக்கப்பட்டது குறித்து தலத்திருச்சபை கண்டனம்


ஜூலை 04, 2011. குஜராத்தில் 2002ம் ஆண்டு ஏறத்தாழ 2000 இசுலாமியர்கள் கொல்லப்பட்டது தொடர்புடைய காவல்துறை ஆவணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன என மாநில அரசு தரப்பில் தற்போது கூறப்பட்டுள்ளது, அநீதி இடம்பெற்றுள்ளதைக் குறிப்பிடுகின்றது என்றார் மனித உரிமைகளுக்காக உழைக்கும் இந்திய இயேசுசபை குரு ஒருவர்.
எந்த ஓர் ஆவணமும் ஐந்தாண்டுகளுக்கே பாதுகாக்கப்படும் அதன் பின்னர் அழிக்கப்பட்டுவிடும் என அரசு தரப்பில் இந்த செயல்பாடு நியாயப்படுத்தப்பட்ட போதிலும், ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அது தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார் ஆஹமதாபாத்தில் நீதி, அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான மையத்தை நடத்தி வரும் இயேசு சபை குரு செத்ரிக் பிரகாஷ்.
இப்படுகொலைகள் இடம்பெற்று ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் நீதி தேடிக் காத்திருக்கின்றார்கள் என்ற கவலையை வெளியிட்ட குரு பிரகாஷ், தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் ஒரு வழக்குத் தொடர்புடைய ஆவணங்கள் அழிக்கப்பட அனுமதிக்கப்பட்டால், நீதி என்பது கிட்டவே வழி இல்லை என்றார்.







All the contents on this site are copyrighted ©.