2011-07-04 16:31:12

உண்மை ஒளிர வேண்டும் என இவ்வுலகு எதிர்பார்க்கிறது என்கிறார் திருத்தந்தை


ஜூலை 04, 2011. தற்பெருமையும் சுயநலமும் வெற்றிகொள்ளப்பட்டு, பிறரன்பு என்பது செயல்பாடுடையதாய் மாறி, பொய்களால் மறைக்கப்படாத உண்மை இவ்வுலகில் சுடர்விடவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையின் 60வது குருத்துவத் திருநிலைப்பாட்டையொட்டி அவர் பெயரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கண்காட்சி ஒன்றைத் துவக்கி வைத்து உரையாற்றிய பாப்பிறை, கிறிஸ்துவிலே உண்மையும் அன்பும் ஒன்று சேர்ந்து வருகின்றன, அதுவே கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையாகவும் இருக்கிறது என்றார்.
உண்மையின் பிரசன்னத்தைக் கொண்டிராத அன்பு, பார்வை ஒளியிழந்ததாகவும், அன்பில்லாத உண்மை, ஒலிக்கும் வெண்கலம் போன்றதாயும் இருக்கும் எனவும் எடுத்துரைத்தார் பாப்பிறை.
ஒவ்வொருவரும் மேலும் மனிதாபிமானம் உடையவராக வாழவேண்டுமெனில், உண்மை மற்றும் அன்பின் அழகு நம் இதயத்தின் ஆழத்தைச் சென்று தட்ட வேண்டும் எனவும் உரைத்த அவர், கலைஞர்கள் ஒரு நாளும் உண்மை மற்றும் பிறரன்பிலிருந்து தங்கள் கலைப்படைப்புகளைப் பிரிக்கக்கூடாது எனவும், உண்மை மற்றும் பிறரன்பிலிருந்து அழகைப் பிரிக்கவும் முயலக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
திருத்தந்தையின் 60வது குருத்துவத் திருநிலைப்பாட்டையொட்டித் துவக்கப்பட்டுள்ள இக்கண்காட்சி, திருப்பீடத்தின் கலாச்சார அவையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.