2011-07-02 15:13:42

திருத்தந்தை : பெற்றோர் குழந்தைகளுக்கு மறைக்கல்வி வழங்குவதில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்


ஜூலை02,2011. கத்தோலிக்கப் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு மறைக்கல்வி வழங்குவதில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், இதன்மூலம் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதியான விசுவாசப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
இந்த ஒரு பணியில், முதலில் பெற்றோர் விசுவாசத்திற்குச் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை, பிள்ளைகளை வளர்ப்பதில் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கண்டு பெற்றோர் பயப்படக் கூடாது என்று கூறினார்.
இவ்வேளைகளில் முழு கிறிஸ்தவ சமூகமும் அவர்களோடு இருக்கின்றது என்றுரைத்த அவர், திருவழிபாடுகளில், குறிப்பாகத் திருநற்கருணையில் பெற்றோர் தங்களுக்குத் தேவையான சக்தியைப் பெறுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
பிள்ளைகளுக்குக் கிறிஸ்தவக் கல்வி வழங்கும் முக்கிய பொறுப்பு குடும்பங்களுக்கு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினார் திருத்தந்தை.
இத்தாலியின் Altamura-Gravina-Acquaviva delle Fonti மறைமாவட்டத்தின் சுமார் ஏழாயிரம் பேரை வத்திக்கானில் பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, திருச்சபை என்பதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
தனக்கு மட்டுமே வாழ்தல், நுகர்வுத் தன்மை, பொறுப்புக்களிலிருந்து விலகியிருக்கும் போக்கு போன்ற இக்காலத்திய போக்குகள், பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றன, ஆனால் கிறிஸ்தவச் சமூகங்கள் எப்போதும் தகுந்த விசுவாசப் பாதைகளைத் தேர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார் திருத்தந்தை







All the contents on this site are copyrighted ©.