2011-07-02 15:11:10

ஞாயிறு சிந்தனை


ஜூலை02,2011 த RealAudioMP3 ோமையார்புரம் திருவிழா, எட்டுப்பட்டி கிராமங்களும் அசந்து பார்க்கும் திருவிழா. அங்கு பங்குசாமியாரா போறவருக்குப் பெரிய தலைவலியே இந்தத் திருவிழாதான். இந்தத் திருவிழா முடிஞ்சா, எல்லாம் முடிஞ்சா மாதிரி. ஒன்பது நாட்கள் நவநாள். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு தலைப்பு. கடைசி நாள் களை கட்டும். சொந்த பந்தங்கள், ஊர் விட்டுப் பிழைக்கச் சென்றவர்கள் எல்லாரும் தோமையார் பெயரைச் சொல்லிச் சேரும் ஒரே நாள். 6 மணிக்கு அஸ்தகால மணி. ஊரேத் திரண்டு கோயில் முன்னாடி. சப்பரங்களுக்குப் பக்கத்தில சின்னப் பயல்கள் மாமா காசக் குடுங்கன்னு அதட்ட, சட்டப் பையில இருந்து 50 காச எடுத்துக் குடுப்பார் மாமா.... விஜய் ரசிகர் மன்றம் அழைக்கிறது... அந்தோனியார் பக்த கோடிகள் பாசத்தோடு அழைக்கும்... தலை அஜித் ரசிகர் மன்றம்... இப்படி சுவர் முழுவதும் வரவேற்பு. அம்மாக்கள் செபமாலையோடு... அப்பாக்கள் நிறை போதையோடு....
வரிசையாக சப்பரங்கள். முதலில் மிக்கேல் சம்மனசாண்டவர். மேள தாளத்தோட பங்கு சாமியாரு, பங்குப் பேரவைத் தலைவர்கள் வர, வடத்தைப் பிடிச்சு சப்பரத்த இழுக்க நான்தான் முதல்ல பிடிப்பென்ற தகராறுல மூணு பேருக்கு மூக்கு போயி, நாலு பேருக்கு பல்ல காணோம். ஒரு விதமா சமரசம் பண்ணி, சப்பரம் ஒரு தெரு, மறு தெரு இன்னொரு தெருன்னு சுத்தி வந்தா, ஒரு தெருவில் “ஏண்டா, நாமளும் அதே வரிதான் கட்றோம். நம்மத் தெருவிலமட்டும் சப்பரத்த சீக்கிரம் சுத்துறாங்க”ன்னு தகராறு. எல்லாம் முடிந்து சப்பரம் இரவு முழுவதும் சுத்தி விடியற்காலைல கோயில் முன்னாடி வந்து நிக்க, சாமியார் புத்தகம், தூபக் கலசம், தீத்தச் செம்போட மந்திரிக்கப் போனா, சப்பரத்துல தோமையார் சுருபத்தக் காணோம். எங்கடா சுருபம்னு கேட்டா, உபதேசியார், "சாமி, என்னைய மன்னிச்சிடுங்க... திருவிழா டென்ஷன்ல சப்பரத்துல தோமையார வைக்க மறந்துட்டேன்" என்றாராம்.
தோமையார் இல்லாம, தோமையார்புரத்துல திருவிழா. இத்தனை ஆர்ப்பாட்டம், அலங்காரம் எல்லாம் யாருக்காக? தோமையாருக்காக. கடைசியில தோமையாரை மறந்து விட்டார்கள். இன்று நாம் இந்தியாவின் பாதுகாவலரான புனித தோமையாரின் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். தொமையாரிடம் வெளிப்பட்ட மதிப்பீடுகளை நாம் வாழ்ந்து காட்டாமல் அவரது பெருவிழாவைக் கொண்டாட எண்ணினால், நாமும் கூட தோமையாரை மறந்த தோமையார்புர மக்களாக மாறிவிடுவோம்.
யோவான் 11: 7-16 வசனங்களில் "வாருங்கள், மீண்டும் யூதேயாவுக்குப் போகலாம்" என்று இயேசு கூற, மற்ற சீடர்கள், "ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மீது கல்லெறிய முயன்றார்கள். மீண்டும் அங்கு போவதா?" என்று தடுக்க, தோமையாரோ பிற சீடர்களிடம், "நாமும் செல்வோம், இயேசுவோடு இறப்போம்" என்று துணிவாகக் கூறுகிறார். யோவான் 14: 4-6 வசனங்களில் இயேசு தன் சீடர்களிடம் "நான் போகுமிடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்" என்று கூற, தோமையாரோ, “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?” (யோவான் 14: 5) என, தனக்குத் தெரியாததைத் துணிவோடு இயேசுவிடம் கேட்கிறார். உயிர்த்த இயேசுவைத் தாங்கள் கண்டதாக யோவான் 20ல் கூறும் பிற சீடர்களிடம் “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்.” (யோவான் 20: 25) என்று துணிவோடு கூறி, பின், “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” (யோவான் 20: 28) என்று விசுவாசத்தை அறிக்கையிடுகிறார். காணாமல் இயேசுவை விசுவசிக்கும் நமக்கெல்லாம் முன்னுதாரணமாகிறார்.இதற்கெல்லாம் மேலாக, இயேசு விண்ணகம் சென்றபின் தான் அனுபவித்த கிறிஸ்துவை நமக்கெல்லாம் அறிவிப்பதர்காகக் கடல் கடந்து கடுந்துன்பங்கள் சந்தித்து, பாரதம் வந்து நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக மாற்றி, கேரளம், தமிழகம் சுற்றி, சென்னையில் இறைதுயில் கொள்ளும் தோமையாரின் விசுவாசச் சாட்சிய வாழ்விற்கு நாம் எவ்வாறு சான்று பகர்கிறோம் என்று இந்த ஞாயிறு சிந்தனையில் சிந்திப்பது நமக்கு உதவி செய்யலாம்.
உண்மையில் நாம் தோமையாரைப் போல வாழ்வாலும், சொல்லாலும், செயலாலும் இயேசுவை வாழ்ந்து காட்டுவோமேயானால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கூறுகிற “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” (மத்தேயு நற்செய்தி 11: 25-27) என்பது நம் ஒவ்வொருவரிலும் நிறைவேறும். தோமையாரைப் போல "என் ஆண்டவரே, என் தேவனே!" என நம் வாழ்வில் இயேசுவை வெளிப்படுத்த சிறிது முயற்சி செய்வோமா?








All the contents on this site are copyrighted ©.