2011-07-01 15:39:23

பாகிஸ்தானில் சிறுபான்மை சமய அமைச்சகம் கலைக்கப்படுவதற்கு சிறுபான்மை மதத் தலைவர்கள் எதிர்ப்பு


ஜூலை01,2011. பாகிஸ்தானில் சிறுபான்மை சமய அமைச்சகத்தைக் கலைத்து அதனை மாநில வாரியாகப் பிரிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு அந்நாட்டு இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
சிறுபான்மை அமைச்சகத்தை மாநில அளவுக்குக் கொண்டு செல்வது, சிறுபான்மை மதத்தவரைப் புண்படுத்துவதாக இருக்கும் என்று அத்தலைவர்கள் குறை கூறினர்.
அரசின் இச்செயல், சிறுபான்மை சமூகங்களின் தேசிய தனித்துவத்தை இருட்டடிப்பு செய்வதற்கான முயற்சியாக இருக்கின்றது என்று, உலக சிறுபான்மை கூட்டமைப்பு உரிமைக் குழுவின் ஜூலியஸ் சாலிக் கூறினார்.
கிறிஸ்தவர்கள், நாட்டில் தொடர்ந்து அநீதிகளையும் பாகுபாடுகளையும் காழ்ப்புணர்வுகளையும் எதிர் கொண்டு வருவதால் அவர்கள் மத்திய அரசு அளவில் தங்களது இருப்பைக் கொண்டிருப்பது மிகவும் இன்றியமையாதது என்று சாலிக் மேலும் கூறினார்.
பாகிஸ்தான் அரசின் அண்மைப் புள்ளி விபரங்களின்படி, நாட்டின் சுமார் 17 கோடியே 70 இலட்சம் மக்களில் 5.5 விழுக்காட்டினர் இந்துக்கள், 2 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.







All the contents on this site are copyrighted ©.