2011-07-01 15:36:21

சீனாவில் சமய சுதந்திரம் கேட்டு ஹாங்காக்கில் கத்தோலிக்கர் பேரணி


ஜூலை01,2011. சீனாவில் சமய சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஹாங்காக் முன்னாள் ஆயர் கர்தினால் ஜோசப் ஜென் தலைமையில் கத்தோலிக்கர் ஹாங்காக்கில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.
சீனாவில் சிறையிலுள்ள “பாப்பிறைக்கு விசுவாசமாயுள்ள மறைந்து வாழும் கத்தோலிக்கத் திருச்சபையை”ச் சேர்ந்த ஆயர்களும் அருட்பணியாளர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் இப்பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பீடத்துடனான ஒன்றிப்பை வெளிப்படுத்தும் நோக்கத்தில் தூயவர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவான இவ்வியாழனன்று திருப்பலியில் கலந்து கொண்ட பின்னர், ஹாங்காக்கிலுள்ள சீனாவின் மத்திய அரசு அலுவலகத்தின் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட கத்தோலிக்கர் கூடி நின்று, சீன அரசு, அருட்பணியாளர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதற்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பினர்.
இப்பேரணி குறித்துப் பேசிய ஹாங்காக் கத்தோலிக்கப் பேச்சாளர் பாட்ரிக் பூன், சீனக் கத்தோலிக்கரின் சமய சுதந்திரம் சகித்துக்கொள்ளப்பட முடியாத வகையில் மீறப்படுவதால் தாங்கள் தெருக்களில் வந்து போராட வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.