2011-07-01 15:34:31

உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் அங்கத்தினர்களுக்கு திருத்தந்தையின் உரை


ஜூலை01, 2011. உலகின் ஏழை எளிய மக்களின் உண்மையான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய உதவும் நிறுவனங்களுடன் பணிபுரிவதற்கான அர்ப்பணத்தை மீண்டும் ஒருமுறை திருச்சபை புதுப்பிப்பதாக, இவ்வெள்ளியன்று ஐநாவின் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் அங்கத்தினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை கூறினார்.
உரோம் நகரில் இடம்பெற்ற FAO நிறுவனத்தின் 37வது அவைக்கூட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 400 பிரதிநிதிகளுக்கு உரை வழங்கிய திருத்தந்தை, முதலில் அந்தச் சர்வதேச நிறுவனத்தின் புதிய தலைவர் ஹோசே கிராசியானோ த சில்வாவுக்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இன்றைய உணவுப் பிரச்சனைகளுக்கானக் காரணமாக, உற்பத்திக் குறைபாடுகளைப்பற்றி மட்டும் சிந்திக்காமல், அதைவிட ஆழமாகச் சென்று ஆராயும் போது, ஏழ்மை,வளர்ச்சியற்ற நிலை மற்றும் பசிக்கு, மனிதனின் சுயநலப் போக்குகளே முக்கியக் காரணம் எனத் தெரிய வருகிறது என்றார்.
இலாபம் என்ற குறிக்கோளில் உயர் ஒழுக்கரீதி கொள்கைகளும் பாதுகாப்புச் சட்டங்களும் நீக்கப்பட்டு, மனிதனின் அடிப்படை உரிமையான உணவு மறுக்கப்படுவது குறித்து மனிதகுலம் எங்ஙனம் மௌனம் காக்கமுடியும் என்ற கேள்வியையும் முன்வைத்தார் பாப்பிறை.
சர்வதேச அளவில் இடம்பெறும் வியாபாரங்கள் குறித்த கொள்கைகள், அனைத்து மனித குலத்தின் நன்மையை கருத்தில் கொண்டதாய் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை, இதன் மூலமே ஒருமைப்பாட்டை வளர்க்க முடியும் எனவும் அதில் FAO நிறுவனம் சிறப்புப் பங்காற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
உணவு இன்மையால் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகளே என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இதனால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் இளவயது மரணங்களும் இடம்பெறுகின்றன மற்றும் சிறிய அளவிலான உணவுக்காகக்கூட அவர்கள் சுரண்டப்படும் அபாயம் இருப்பதையும் குறிப்பிட்டு கவலையை வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.