2011-06-30 16:06:06

இறையியலில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துள்ள மூன்று ஐரோப்பிய இறையியலாளருக்கு “ஜோசப் ராட்சிங்கர் விருது”


ஜூன் 30,2011. இறையியலில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துள்ள மூன்று ஐரோப்பிய இறையியலாளருக்கு “ஜோசப் ராட்சிங்கர் விருதை” இவ்வியாழனன்று வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தை 16ம் பெனடிக்டின் திருமுழுக்குப் பெயரான ஜோசப் ராட்சிங்கர் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இவ்விறையியல் விருதை முதன்முறையாக வழங்கி உரையாற்றிய அவர், இறையியல் என்றால் என்ன என்பதை விளக்கினார்.
வத்திக்கானில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிறிஸ்தவ வரலாற்றுப் பேராசிரியரான உரோமை நகரைச் சார்ந்த 85 வயது நிரம்பிய Manilo Simonetti, பல இறையியல் நூல்களை எழுதியுள்ள இஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 76 வயது குரு Olegario Gonzalez de Cardedal, Cistersian துறவு இல்ல அதிபரும், இறையியலாலருமான 50 வயது நிரம்பிய ஜெர்மானியக் குரு Maximilian Heim ஆகியோர் இவ்விருதைப் பெற்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஐம்பதாயிரம் யூரோக்களையும் பெற்றனர்.
ஜோசப் ராட்சிங்கர் அறிவியல் கழகம் என்ற வத்திக்கான் அமைப்பு இவ்விருதை வழங்குகின்றது. இவ்வறிவியல் கழகத்தின் தலைவர் கர்தினால் கமிலோ ரூயினி ஆவார். இறையியல் துறையை, சிறப்பாக, திருமறைநூல், திருச்சபைத் தந்தையர்கள், அறிவு மற்றும் கலாச்சாரத்தை மையப்படுத்தும் இறையியல் ஆகிய துறைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.