2011-06-29 15:30:12

திருத்தந்தை : புனிதர்கள் பேதுரு, பவுலின் அன்பு மற்றும் விசுவாச வாழ்வின் சாட்சியம், மக்களை உண்மைக்கு வழிநடத்திச் செல்கின்றது


ஜூன்29,2011. புனிதர்கள் பேதுரு, பவுலின் அன்பு மற்றும் விசுவாச வாழ்வின் சாட்சியம், திருச்சபையின் மேய்ப்பர்களை ஒளிர்விக்கிறது மற்றும் மக்களை உண்மைக்கு வழிநடத்தி கிறிஸ்துவில் விசுவாசம் கொள்வதற்குப் பயிற்சியளிக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
உரோம் நகரின் பாதுகாவலர்களான புனிதர்கள் பேதுரு, பவுலின் பெருவிழாவான இப்புதனன்று நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இந்த மாபெரும் இரண்டு இளவரசர்களின் விலைமதிப்பில்லாக் குருதியினால் வளமடைந்த உரோம் நகரே அகமகிழ்வாய் என்றும் கூறினார்.
குறிப்பாக, புனித பேதுரு, திருத்தூதர்கள் குழுவின் ஒன்றிப்பைக் குறித்து நிற்கின்றார் என்று சொல்லி, இதனால் வத்திக்கான் பேதுரு பசிலிக்காவில் நடைபெற்ற இன்றையத் திருவழிபாட்டில் நாற்பது புதிய பேராயர்களுக்குப் பாலியம் என்ற கழுத்துப்பட்டை வழங்கினேன் என்றார் திருத்தந்தை.
இந்தப் பாலியமானது, இறைமக்களை மீட்பின் பாதையில் நடத்திச் செல்லும் மறைப்பணியில் உரோம் ஆயருடன் பேராயர்கள் கொண்டுள்ள ஒன்றிப்பின் வெளிப்பாடாக இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
இப்பெருவிழா நாளில் தான் தனது அறுபதாவது குருத்துவத் திருநிலைப்பாட்டைச் சிறப்பித்ததையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, இந்த நாளில் தனக்காகச் செபித்த மற்றும் தனக்கு வாழ்த்துக் கூறிய எல்லாருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
இந்த நாளின் அர்த்தமுள்ள நிகழ்வில் கலந்து கொண்ட கான்ஸ்டாண்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தலைவர் தலைமையிலான பிரதிநிதி குழுவுக்கும், இந்நாளில் பாலியம் பெற்ற நாற்பது பேராயர்களுடன் வந்திருந்த அனைவருக்கும் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.