2011-06-28 16:13:46

விவிலியத் தேடல் - திருப்பாடல் 46



ஜூன்28,2011. RealAudioMP3 மரம் அறுக்கும் ஒரு தொழிற்சாலையில் ஒரு நாள் ஆறு அல்லது ஏழு இளையோர் சேர்ந்து அங்கு குவிந்திருந்த மரத்தூளை மூட்டைகளாகக் கட்டுவதில் மும்முரமாய் இருந்தனர். இளையோர் கூடி வேலை செய்யும்போது வேடிக்கையும், விளையாட்டும் கூடவே இருக்கும் அல்லவா? இந்தக் குழுவிலும் அவை இருந்தன. விளையாட்டு அதிகமானது. அப்போது அவர்களில் ஒருவர் மரத்தூள் நிறைந்த ஏதோ ஒரு மூட்டைக்குள் தான் கட்டியிருந்த 'வாட்ச்' விழுந்துவிட்டதை உணர்ந்தார். அது அவருக்கு அன்புப்பரிசாகத் தரப்பட்ட விலையுயர்ந்த வாட்ச். எனவே, அவரது நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து தேடினார்கள். இந்தத் தேடலே சில நிமிடங்களில் ஒரு விளையாட்டாக மாறிவிட்டது. அவர்கள் அனைவரும் அரைமணி நேரம் தேடியும் அவர்களால் வாட்ச்சைக் கண்டு பிடிக்க முடியவில்லை. மதிய உணவு இடைவேளைக்கென அனைவரும் கலைந்து சென்றனர்.
வாட்ச்சை இழந்தவர் மட்டும் சாப்பிடச் செல்லாமல், தனியேத் தேடினார். பத்து நிமிடங்களில் வாட்ச்சைக் கண்டுபிடித்தார். ஒரே மகிழ்ச்சி. தன் நண்பர்களிடம் தன் வாட்ச்சைக் காண்பித்தார். "நாங்கள் அத்தனை பேர் தேடியும் கிடைக்காத வாட்ச் உனக்கு எப்படி கிடைத்தது?" என்று நண்பர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், "நீங்கள் எல்லாரும் போனபின், அந்த இடம் அமைதியாக இருந்தது. நான் இன்னும் உன்னிப்பாகத் தேடினேன். நான் கேட்டுப் பழகிப் போன என் வாட்ச்சின் டிக், டிக் ஓசையை என்னால் கேட்க முடிந்தது. அந்த சன்னமான ஒலி வாட்ச் இருந்த மூட்டைக்கு என்னை அழைத்துச் சென்றது." என்றார்.
காணாமல் போன பொருட்களைத் தேடுவதற்கு மட்டுமல்ல, வாழ்வின் பல ஆழமான, தேவையான உண்மைகளைத் தேடி, கண்டு கொள்ளவும் அமைதி நமக்கு உதவும். போராட்டம், குழப்பம் இவைகள் பெருகினாலும், இந்த அமைதியை நம்மால் உணர முடியும், அந்த அமைதிக்குப் பின்புலத்தில் இருக்கும் கடவுளையும் நம்மால் உணர முடியும் என்பதைக் கூறும் திருப்பாடல் 46 நமது தேடலில் இன்று இடம் பெறுகிறது.
இந்தப் பாடலை நான் தேர்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம்... இந்தப் பாடலின் இறுதியில் வரும் பத்தாம் திருவசனம்:
திருப்பாடல் 46: 10
அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்.
ஆங்கிலத்தில் இந்த வரி சிறிது வித்தியாசமாக ஒலிக்கிறது. “Be still, and know that I am God.” ஆடாமல், அசையாமல் இருந்து, நானே கடவுள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அர்த்தமுள்ள இந்த வரியைப் புரிந்து கொள்ள, இத்திருப்பாடலின் பின்னணியும், அங்கு கூறப்பட்டுள்ள சில எண்ணங்களும் உதவியாக இருக்கும். இறைவனைத் தேடி மலைகளில், காடுகளில் தவங்கள் மேற்கொண்டவர்களை மனித வரலாறு கூறியுள்ளது. மலையிலும், காட்டிலும் கடவுளைக் காண்பதற்கு முன், முனிவர்கள் நீண்ட அமைதியில் தவம் புரிந்தனர். அந்த ஆழ்ந்த அமைதியின் பயனாக, அவர்கள் கடவுளைக் கண்டனர். ஆனால், கடவுளைக் காண எப்போதும் மலைகளையும், காடுகளையும், அவை தரும் அமைதியையும் நாடத் தேவையில்லை. மக்கள் நிறைந்த சந்தையில், பிரச்சனைகள் நிறைந்த போர்க்களத்தில் இறைவனைக் காண முடியும் என்பதை, திருப்பாடல் ஆசிரியர் இந்தப் பாடலில் கூறுகிறார்.
அசீரியர்கள் யூதேயாவின் மீது படையெடுத்து, அந்நாட்டை சீர்குலைத்த நேரத்தை நினைவில் கொண்டு தாவீது இந்தப் பாடலை எழுதினார் என்று சொல்லப்படுகிறது. இந்தத் திருப்பாடலின் இறுதியில் வரும் இந்த வரியை எழுதுவதற்கு முன், தாவீது தன் நாட்டிற்கும், மக்களுக்கும் ஏற்பட்ட போராட்டங்களையும், அழிவுகளையும் விளக்குகிறார். இவைகளை வெறும் அழிவுகளாகப் பட்டியலிடுவதற்குப் பதில், ‘எங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், நாங்கள் கடவுளை நம்பி வாழ்வோம்’ என்ற ஒரு விசுவாச அறிக்கையாகக் கூறுகிறார்.
திருப்பாடல் 46: 2-3
நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், கடலின் அலைகள் கொந்தளித்துப் பொங்கினாலும், அவற்றின் பெருக்கால் குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை.
தன்னைச் சுற்றி நடக்கும் கலவரங்களைக் கண்டு, பயத்தில் அலறும் குழந்தையை தந்தையோ, தாயோ அரவணைத்து, முதலில் மேற்கொள்ளும் முயற்சி என்ன? அக்குழந்தையை அமைதிப்படுத்துதல். மிகச்சிறிய குழந்தை என்றால், தங்களது இறுக்கமான அரவணைப்பில் அந்தக் குழந்தை முகம்புதைத்து கண்களை மூட உதவிகள் செய்வர். அமைதி அடைந்து உறங்கத் துவங்கும் குழந்தை, அதற்குப்பின் என்னதான் நடந்தாலும், எளிதில் கண்விழிக்காது. இந்தத் திருப்பாடலை வாசிக்கும்போது, சப்தங்களின் மத்தியிலும் கண்ணயர்ந்துத் தூங்கும் அந்தக் குழந்தையின் உருவமே என் மனதில் பதிகின்றது. இறைவன் இருக்கிறார், எந்தச் சூழலிலும் நம் அருகே, நம்மைச் சூழ்ந்து அவர் இருக்கிறார் என்ற உணர்வு அமைதியைத் தரும், அந்த அமைதியில் கடவுளை இன்னும் ஆழமாய் உணர முடியும் என்பதையே இந்த வரி நமக்குச் சொல்கிறது. அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்.
அமைதிக்கு பதில், ஆரவாரங்களை, ஆர்ப்பாட்டங்களைத் தேடும் நமது உலகம் அமைதியைக் கண்டு அஞ்சுகிறதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. வாட்ச் தேடுவதில் இறங்கிய அந்த இளையோர் உண்டாக்கிய இரைச்சலில் வாட்ச் மட்டுமல்ல, எதையுமே அவர்களால் கண்டுபிடித்திருக்க முடியாது. பல நேரங்களில் நாமும் நம்மைச் சுற்றி இதுபோல் இரைச்சல்களை உருவாக்கிக் கொள்கிறோம். நம் இல்லங்களில் TV அல்லது வானொலி ஒலிக்காத நேரம் வெகுக் குறைவுதானே. இது மட்டுமல்ல, இக்காலத்தில் காதில் எப்போதும் எதோ ஒன்று ஒலித்துக் கொண்டிருக்கும் வண்ணம் இசை, செல்லிடப் பேசி என்று ஒரு நாளில் குறைந்தது 15 மணி நேரங்களாவது எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கும் போக்கை இளையோர் மத்தியில் நாம் அதிகம் காண்கிறோம். வீட்டில் அமைதி நிலவினால், அங்கு எதோ ஒரு துயரமான சம்பவம் நடந்து விட்டதென்று தீர்மானிக்கும் அளவு இன்றைய உலகம் சப்தங்களால் நிறைந்து வழிகின்றது. சப்தங்கள் இருந்தால் மட்டுமே அங்கு மகிழ்ச்சியும் வாழ்வும் உள்ளன என்று சொல்லும் அளவுக்கு ஒலி ஒருவரது வாழ்வை ஆக்கிரமித்து வருகிறது.
இளையோர் எதையாவது பேசிக் கொண்டு, கேட்டுக் கொண்டு அல்லது செய்துகொண்டே இருக்க வேண்டும். வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லையெனில், செல்லிடப் பேசியில் எதையாவது விளையாட வேண்டும் அல்லது கணனியில் எதையாவது பார்க்க, விளையாட வேண்டும். ஒன்றும் செய்யாமல் அமைதியாக அவர்கள் இருக்கும் நேரம் அவர்கள் உறங்கும் நேரம் ஒன்று தானோ என்ற கேள்வி எழுகிறது.
நம்மில் பலர், அதிலும் சிறப்பாக இளையோர், அமைதியைக் கண்டு என் அச்சம் கொள்கின்றனர்? அமைதி என்றால், அவர்கள் தனித்து விடப்படுகின்றனர். அவர்கள் தங்களுடன் வாழ வேண்டியுள்ளது. இந்தச் சூழலைத் தவிர்க்கவே அவர்கள் எப்போதும் மற்றவர்களுடன், அல்லது ஏதாவது ஒரு கருவியுடன் நேரத்தைச் செலவிடுகின்றனர். அவர்களிடம், 'அமைதி கொண்டு நானே கடவுள் என்று உணர்ந்து கொள்ளுங்கள்' என்று சொன்னால், டாடா, பைபை என்று சொல்லி அடுத்த செயலுக்குத் தாவி விடுவார்கள்.
எந்தச் சூழலிலும் கடவுள் இருக்கிறார் என்பது உண்மை. ஆனால், அந்தச் சூழல்களில் நம் மனதை அமைதிப்படுத்த, ஒருநிலைப்படுத்த முயன்றால், அங்கிருக்கும் இறைவனை நாம் காண முடியும். பகட்டான, பெரிதான, பிரமிப்பூட்டும் வழிகளில் இறைவன் வருவதில்லை என்பதை விவிலியத்தில் நாம் வாசிக்கிறோம். இறைவாக்கினர் எலியாவுக்கு அவர் தன்னையே வெளிப்படுத்திய அழகை இவ்வாறு வாசிக்கிறோம்.
அரசர்கள் முதல் நூல் 19: 11-13
அப்போது ஆண்டவர், எலியாவிடம் “வெளியே வா: மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்லவிருக்கிறேன்” என்றார். உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது. அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, “எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று ஒரு குரல் கேட்டது.
அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள். அமைதி கொண்டு ஆண்டவனைக் காணும் கலையை இறைவனின் ஆவியானவர் நமக்குச் சொல்லித் தர வேண்டும் என்று மன்றாடுவோம். எவ்வளவுதான் பிரச்சனைகள் நம்மை நெருக்கினாலும், அவைகளின் நடுவே தாயின் அணைப்பில் உறங்கும் குழந்தையைப் போல் நாமும் இறைவனின் பிரசன்னத்தில் அமைதி கொள்ள முயல்வோம்.








All the contents on this site are copyrighted ©.