2011-06-28 16:09:25

ஜூன் 29 – வாழந்தவர் வழியில்...


ஆங்கிலக் கவிஞர்களில் புகழ்பெற்ற Elizabeth Barrett Browning, 1806ம் ஆண்டு செல்வம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். இவர் தன முதல் கவிதையை எழுதியபோது இவருக்கு வயது 6 அல்லது 8 இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 14வது வயதில் இவர் எழுதிய நீண்டதொரு கவிதையை இவரது தந்தை ஒரு சிறு நூலாக வெளியிட்டார்.
எலிசபெத் தனது 20வது வயது முதல் இனம் புரியாத ஒரு நோயுடன் போராட ஆரம்பித்தார். தன் வாழ்நாள் முழுவதும் குணமாக்க முடியாத இந்த நோயால், அவர் தனியே படுக்கையில் தன் நேரத்தைச் செலவிட்டபோது, கவிதைகள் எழுதி வந்தார்.
அடிமைகள் முறையைத் தீவிரமாக எதிர்த்து, கவிதைகள் வெளியிட்டார் எலிசபெத். 1844ம் ஆண்டு இவர் வெளியிட்ட கவிதைகள் மிகவும் புகழ் அடைந்தன. இக்கவிதைகளால் மிகவும் ஈர்க்கப்பட்ட Robert Browning என்ற கவிஞர் இவர்மீது ஆழ்ந்த காதல் கொண்டார். செல்வம் மிகுந்த தந்தையின் விருப்பத்திற்கு மாறாக, செல்வம் ஏதும் இல்லாத Robertஐ எலிசபெத் மணம் முடித்தார். இருவரும் இத்தாலி நாட்டிற்குக் குடி பெயர்ந்தனர்.
ஆன்மீக ஆழமும், இலக்கிய நயமும் எலிசபெத் கவிதைகளில் காணக் கிடக்கின்றன. விவிலியத்தில் மோசே இறைவனைச் சந்தித்த அந்த முட்புதர் நிகழ்வை எலிசபெத் தன் கவிதையில் இவ்விதம் கூறியுள்ளார்:
"மண்ணகம் விண்ணகத்துடன் மோதியது;
ஒவ்வொரு புதரும் கடவுளின் பிரசன்னத்தால் எரிந்தது;
(அகக்)கண் கொண்டு பார்த்தவர்கள் காலணிகளைக் கழற்றினர்;
மற்றவர்களோ புதரைச் சுற்றி அமர்ந்து பழம்பறித்து உண்டனர்."

வாழ்நாளெல்லாம் நோயோடு போராடிய Elizabeth Barrett Browning, 1861ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி தனது 55வது வயதில் காலமானார்.







All the contents on this site are copyrighted ©.