2011-06-25 15:27:53

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 இயேசு சபையின் முன்னாள் தலைவர் பேத்ரோ அருப்பே சபையின் தலைவராவதற்கு முன், ஜப்பானில் பணி புரிந்தவர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்த நேரத்தில் அங்கு இவர் நவ துறவிகளின் பயிற்சியாளராக இருந்தார். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் அணுகுண்டு ஹிரோஷிமாவை அழித்தது. 80000க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அந்த கொடுமையின்போது, அந்த நகரின் புறநகர் பகுதியில் இருந்த இயேசு சபை நவதுறவியர் இல்லம் பெரும் சேதமின்றி தப்பித்தது. அதன் கதவு சன்னல்கள் எல்லாம் உடைந்தாலும் கட்டிடம் ஓரளவு உறுதியாய் நின்றது. அந்த இல்லம் ஒரு மருத்துவ மனையாக மாறியது. அங்கிருந்த சிறு கோவிலும் காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது. அணுகுண்டு வீசப்பட்டதற்கு அடுத்த நாள் அந்த இல்லத்தின் கோவிலில் பேத்ரோ அருப்பே திருப்பலி நிறைவேற்றினார். அந்தத் திருப்பலி நேரத்தில் அவர் அடைந்த வேதனை அனுபவத்தை இவ்விதம் கூறியுள்ளார்:
"நான் திருப்பலி நிகழ்த்தியபோது, அங்கு காயப்பட்டுக் கிடந்தவர்களைப் பார்த்து 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக' என்று சொல்ல கைகளை விரித்தேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. எனக்கு முன் காயப்பட்டுக் கிடந்த அந்த மனுக் குலத்தை, அவர்களை அந்த நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் அழிவுச்சிந்தனைகளை எண்ணியபோது, என் விரிந்த கைகள் அப்படியே நின்றுவிட்டன. அங்கு படுத்திருந்தவர்கள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை என் உள்ளத்தைத் துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு ஆறுதல் வருமா, முக்கியமாக, இந்த பீடத்திலிருந்து ஆறுதல் வருமா என்ற ஏக்கத்தை அவர்கள் பார்வையில் நான் படித்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத திருப்பலி அது" என்று அருள்தந்தை பேத்ரோ அருப்பே தன் நினைவுகளை எழுதியுள்ளார்.
அருள்தந்தை பேத்ரோ அருப்பே மருத்துவம் படித்தவர் என்பதால், ஹிரோஷிமா தாக்குதலுக்குப்பின், நவதுறவியர் இல்லத்தில் மட்டுமல்ல, வெளியிலும் சென்று தன்னால் இயன்ற அளவு மருத்துவ உதவிகள் செய்துவந்தார். ஒரு நாள் மாலை அவர் வீடு வீடாகச் சென்று உதவிகள் செய்து வந்தபோது, Nakamura San என்ற இளம் பெண்ணின் வீட்டுக்கும் சென்றார். அணுகுண்டின் கதிர் வீச்சால் அந்த இளம் பெண்ணின் உடல் பெருமளவு எரிந்துபோய், கொடூரமான வேதனையில் அந்தப் பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவர் இருந்த நிலையைக் கண்ட தந்தை அருப்பே, கண்களில் பெருகிய கண்ணீரை அடக்கிக் கொண்டு, அவர் அருகில் முழந்தாள் படியிட்டு, அவரது காயங்களுக்கு மருந்துகள் இட்டபோது, அந்தப் பெண் தந்தை அருப்பேயிடம், "பாதர், எனக்கு திருநற்கருணை கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். தந்தை தலையை அசைத்தபடி, தான் கொண்டு வந்திருந்த திருநற்கருணையை அந்தப் பெண்ணுக்குத் தந்தார். மிகுந்த பக்தியுடன் நற்கருணையை உட்கொண்ட Nakamura San சில நிமிடங்களில் இறையடி சேர்ந்தார்.
ஒரு மறக்கமுடியாத திருப்பலி, மறக்க முடியாத நற்கருணை பரிமாற்றம் இரண்டையும் அருள்தந்தை அருப்பே தன் வாழ்வைப் பாதித்த ஆழமான நினைவுகளாக எழுதிச் சென்றுள்ளார். காயப்பட்ட மனுக்குலத்திற்கு முன் காயப்பட்டக் கடவுளைக் காட்டும் ஒரு திருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இன்று இயேசுவின் திரு உடல் திரு இரத்தத் திருவிழா.
நம்மில் பலர் புது நன்மையைச் சிறுவயதில் வாங்கியிருப்போம். அந்த நாளுக்கென நம்மைத் தயாரிக்க, பங்குதந்தையர் அல்லது அருள்சகோதரிகள் நமக்கு மறைகல்விப் பாடங்கள் சொல்லித் தந்திருப்பர். அப்ப இரச வடிவில் இயேசு பிரசன்னமாகி இருக்கும் இந்தப் பெரும் மறையுண்மையைப் பற்றி கதைகள் பல சொல்லியிருப்பர். இந்தக் கதைகள் இன்னும் நம் நினைவுகளில் தங்கியிருந்தால், இன்னும் நம் வாழ்வில் தாக்கங்களை உருவாக்கி வந்தால், நாம் பேறு பெற்றவர்கள். கதைகளின் வழியே நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் எளிதாக, ஆழமாக நம் மனங்களில் பல ஆண்டுகள் குடியேறும் வாய்ப்புக்கள் உண்டு. அந்தச் சக்தி அறிவியல், இறையியல் விளக்கங்களுக்கு உண்டா என்று எனக்குத் தெரியவில்லை.
இயேசுவின் திரு உடல், திரு இரத்தத்தின் திருவிழா, அன்பைக் கொண்டாடும் ஒரு திருவிழா என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒருவரது அன்பு வெளிப்படும்போது, அதை அனுபவிப்பதே மேல். அதற்குப் பதிலாக, அந்த அன்பு எப்படிப்பட்டது, ஏன் ஏற்பட்டது என்ற ஆராய்ச்சிகளில் இறங்கினால், அங்கு அன்பு காணாமல் போகும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. என்னதான் சொன்னாலும், கேள்விகள் மனதில் எழத்தானே செய்கின்றன. ஒரு சில நிமிடங்கள் கேள்விகளுக்கு ஒதுக்குவோம்.
நம் இறைவன் எப்படி மூவொரு இறைவனாய் இருக்கிறார் என்ற கேள்வியை விட, அவர் ஏன் மூவொரு இறைவனாய் இருக்கிறார் என்ற கேள்விக்கு விடை தேடுவது நமக்கு நல்லது என்று சென்ற வாரம் சிந்தித்தோம். அதேபோல், இயேசுவின் பிரசன்னம் எப்படி அந்த அப்ப இரச வடிவில் உள்ளதென்ற இறையியல் விளக்கங்களைக் காட்டிலும், ஏன் நம் இறைமகன் இயேசு அப்ப இரச வடிவில் நம்முடன் தங்கியுள்ளார் என்பதை உணர்ந்து கொள்வது நமக்குப் பயனளிக்கும்.
ஏன் இறைமகன் அப்ப இரச வடிவில் தன் பிரசன்னத்தை இந்த உலகில் விட்டுச் சென்றார்? அப்பமும், இரசமும் இஸ்ரயேல் மக்களிடம் இருந்த எளிய உணவுப் பொருட்கள். இந்த உணவு இவர்கள் தினமும் உண்ட உணவு. எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அவை நம் உடலின் பகுதியாக மாறிவிடும். நம் இரத்தமாக, தசையாக, எலும்பாக, நரம்பாக மாறிவிடும். உணவுக்குள்ள இந்த அடிப்படை குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்று நினைக்கிறேன்.
எளிய உணவாக, நாம் தினமும் உண்ணும் உணவாக, நம் உடலாகவே மாறி, நம்மை வாழவைக்கும் உணவாக இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை. இணைபிரியாமல், எப்போதும் மனித குலத்துடன் தங்கியிருப்பதற்கு இயேசு இந்த வழியை நிறுவிச் சென்றார். முற்றிலும் நம் அறிவால் புரிந்து கொள்ள முடியாத இயேசுவின் இந்த பிரசன்னத்தைப் பற்றிய பல புதுமைகள் மனித வரலாற்றில் நடந்துள்ளன. இன்றும் தொடர்கின்றன. தங்களுடன் இறைமகன் இயேசு இருக்கிறார் என்ற அந்த ஓர் உணர்வால் எத்தனையோ வீர உள்ளங்கள் தங்கள் உயிரையும் இழக்க தயாராக இருந்தார்கள். அவருக்காக இத்தனை நூற்றாண்டுகள் உழைக்கவும் முன்வந்தார்கள்.
இந்த பெரும் உள்ளங்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள ஒரு சில எடுத்துக்காட்டுகளுடன் நம் இன்றைய சிந்தனைகளை நிறைவுசெய்வோம்:
17ம் நூற்றாண்டில் கனடாவில் பழங்குடியினரிடையே பணி புரிந்து அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை குருக்களில் Isaac Jogues ஒருவர். இவர் தொடர்ந்து அந்த மக்களால் சித்ரவதைகள் செய்யப்பட்டார். இந்தச் சித்ரவதைகளால் தன் கை விரல்களையெல்லாம் அவர் இழந்திருந்தார். மனித உடலை, உடலின் பாகங்களை உண்ணும் பழக்கம் கொண்ட அந்த மக்களின் மத்தியில் உழைத்த Isaac Jogues தன் கைவிரல்களை எப்படி இழந்தார் என்பதை இங்கு குறிப்பிடாமல் இருப்பது நல்லது. இந்த நிலையில் அவர் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது, அங்கு திருப்பலி நிகழ்த்த விரும்பினார். கைவிரல்கள் இல்லாததால், அவர் திருப்பலி செய்வதற்கு திருத்தந்தையின் தனிப்பட்ட உத்தரவைப் பெற வேண்டியிருந்தது. அப்போது திருத்தந்தையாக இருந்த 8ம் Urbanஇடம் உத்தரவு கேட்டபோது, அவர், "இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக வாழும் இக்குரு திருப்பலி நிகழ்த்த யாரும் தடை செய்யமுடியுமா?" என்று சொல்லி, அவருக்கு உத்தரவு அளித்தார். விரல்கள் இல்லாதபோதும், திருப்பலி நிகழ்த்தி, அப்பத்தையும் கிண்ணத்தையும் தன் விரல்களற்ற கைகளில் அவர் உயர்த்திப் பிடித்தது கட்டாயம் பலருக்கு இறை பிரசன்னத்தின் வலிமையை உணர்த்தியிருக்கும்.
இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் 21 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட பேராயர் Dominic Tang காற்று வசதி சிறிதும் இல்லாத ஒரு சிறு அறையில் ஐந்து ஆண்டுகள் தனித்து அடைக்கப்பட்டிருந்தார். ஐந்து ஆண்டுகள் சென்று, பேராயர் தன் சிறு அறையை விட்டு ஒரு சில மணி நேரங்கள் வெளியே வர உத்தரவு கிடைத்தது. அப்போது சிறை அதிகாரிகள் அவரிடம், "இந்த சில மணி நேரங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்? காலாற நடக்கப் போகிறீர்களா? குளித்து, புதுஉடை அணிய விருப்பமா? வீட்டில் யாரையும் அழைத்துப் பேச விருப்பமா?" என்று கேட்டபோது, பேராயர் Tang தான் திருப்பலி நிகழ்த்த விரும்புவதாகக் கூறினாராம்.
San Francisco உயர்மறைமாவட்டத்தின் பேராயராக John Quinn இருந்தபோது, அவரது மறைமாவட்டத்தில் உழைக்க அருளாளர் அன்னை தெரேசாவும் சில சகோதரிகளும் வர சம்மதித்தனர். பேராயருக்கு பெரும் மகிழ்ச்சி. அருட்சகோதரிகள் தங்குவதற்கு அவர் ஒரு வீட்டை தாயரித்திருந்தார். அன்னை தெரேசா அங்கு வந்தபோது, அந்த வீட்டில் செய்யப்பட்டிருந்த வசதிகளையெல்லாம் பார்த்தார். வீட்டின் தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளங்களை எடுக்கச் சொன்னார். கதவு, சன்னல்களுக்குப் போடப்பட்டிருந்த திரை சீலைகளை எடுக்கச் சொன்னார். வீட்டிற்குள் வைக்கப்பட்டிருந்த நான்கு அல்லது ஐந்து தொலைபேசிகளுக்குப் பதில் ஒன்று போதும் என்று சொன்னார். இப்படி அவர் ஒவ்வொன்றாக அந்த வசதிகளையெல்லாம் குறைத்தபின், பேராயரிடம், "ஆயரே, இந்த வீட்டில் எங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு நற்கருணைப் பேழை மட்டுமே." என்று சொன்னாராம். இந்த சம்பவத்தை பேராயர் தன் மறைமாவட்டக் குருக்களுக்கு எடுத்துச் சொல்லி, இயேசுவின் பிரசன்னம் இருந்தால் போதும் என்று வாழும் வழிகளை அவர்கள் தேட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதேபோல், வியட்நாமில் சிறைபடுத்தப்பட்டு கடின உழைப்பு முகாமில் ஒன்பது ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்தார் இயேசு சபை குரு Joseph Nguyen-Cong Doan. அந்த முகாமில், அவரோடு சிறைப்படுத்தப்பட்டிருந்த மற்றொரு குரு சிறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் கொண்டு வந்திருந்த அப்பம் இரசம் இவைகளை இயேசு சபை குருவுடன் பகிர்ந்து கொண்டார். இரவில் மற்றவர்கள் படுத்து உறங்கியபின், Joseph படுத்தபடியே ஆற்றிய திருப்பலிகளைப் பற்றி பின்னர் மற்றவர்களுக்குச் சொன்னார். தன் நெஞ்சை ஒரு பீடமாக பயன்படுத்தி, தன் சிறை உடுப்புக்களை தன் பூசை உடுப்புக்களாகக் கருதி அவர் ஆனந்த கண்ணீர் போங்க ஆற்றிய அந்தத் திருப்பளிகளைப்ப் பற்றி மற்றவர்களுக்குச் சொன்னார்.
இறைவனின் பிரசன்னம் இப்படி பல கோடி மக்களின் மனதில் நம்பிக்கையை, வீரத்தை, தியாகத்தை, அனைத்திற்கும் மேலாக அன்பை விதைத்துள்ளது. இந்த அற்புதத்தை மட்டும் எண்ணி இந்த நாளை நாம் பெருமையோடு கொண்டாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.