2011-06-25 15:32:14

கடல்சார்ந்த தொழில் செய்வோரின் பாதுகாப்புக்கு நாடுகள் உறுதி வழங்க வேண்டும், திருப்பீடம் அழைப்பு


ஜூன்25,2011. கடல்சார்ந்தத் தொழில் செய்வோரின் நல்வாழ்வுக்கு உறுதி வழங்கும் விதத்தில் அவர்களுக்கானத் தற்காப்பு நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்படுமாறு திருப்பீடம் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
வருகிற ஜூலை 10ம் தேதி ஞாயிறன்று அனைத்துலக கடல் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்வோர்க்கானத் திருப்பீட மேய்ப்புப்பணி அவை, இக்காலத்தில் கடல்சார்ந்தத் தொழிலாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.
கடற்கொள்ளையர்கள் குறித்தத் தனது அண்மை அறிக்கை பற்றியும் குறிப்பிட்டுள்ள அத்திருப்பீட அவை, இத்தொழிலாளிகள் பிரச்சனைகளை எதிர்நோக்கும் போது மட்டுமே அவர்கள் உலகுக்கு அறியப்படுகிறார்கள் என்றும் கூறியது.
இவர்கள் அரசுகளோடும், சர்வதேச நிறுவனங்களோடும் சேர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அச்செய்தி கோடிட்டுக் காட்டுகிறது.
கத்தோலிக்கத் திருச்சபையானது 1920ம் ஆண்டு முதல் இத் இத்தொழிலாளிகளுக்கு மேய்ப்புப்பணியாற்றி வருகின்றது.
கடல்சார் தொழிலாளிகளுக்கான மேயப்புப்பணி அவை, அடுத்த ஆண்டு நவம்பர் 19 முதல் 23 வரை உரோமையில் 23வது உலக மாநாட்டை நடத்தவிருப்பதையும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது
தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் சுமார் 15 இலட்சம் பேர் கடல்சார் தொழிலாளிகள் பணியில் உள்ளனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் உலகளாவிய வணிகத்தில் 90 விழுக்காட்டுப் போக்குவரத்தைச் செய்து உலகப் பொருளாதாரத்திற்கு நற்சேவை செய்கின்றனர்.
இச்செய்தியில் அவ்வவையின் தலைவர் பேராயர் Antonio Maria Vegliò மற்றும் செயலர் ஆயர் Joseph Kalathiparambi கையெழுத்திட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.