2011-06-25 15:34:50

அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், நவீனச் சமூகத் தொடர்பு சாதனங்களின் பாதுகாவலர் என அறிவிக்கப்பட வேண்டும், இத்தாலிய பத்தரிகையாளர் கழகம் வலியுறுத்தல்


ஜூன்25,2011. அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் புனிதர் என அறிவிக்கப்படும் போது அவர் நவீனச் சமூகத் தொடர்பு சாதனங்களின் பாதுகாவலர் என அறிவிக்கப்பட வேண்டுமென ஓர் இத்தாலிய பத்தரிகையாளர் கழகம் கேட்டுள்ளது
அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், புதிய தொழிற்நுட்பங்களுக்கு விவேகத்துடனும் தைரியத்துடனும் திறந்த மனது காட்டினார் என்று கூறி, இவர் நவீனச் சமூகத் தொடர்பு சாதனங்களின் பாதுகாவலர் என அறிவிக்கப்பட வேண்டுமென உரோம் நிருபர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் தனது 26 வருட பாப்பிறைப் பணியின் போது ஊடகத்துறையினரோடு நெருங்கிய உறவு வைத்திருந்தார் எனவும் இவர் போல் எந்தத் திருத்தந்தையும் இத்தகைய உறவை வைத்திருந்ததில்லை எனவும் உரோம் நிருபர் கழகத் தலைவர் ரொமானோ பர்த்தோலோனி கூறினார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், கடந்த மே ஒன்றாந்தேதி அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்ட திருப்பலியில் சுமார் 15 இலட்சம் பேர் கலந்து கொண்டனர். இதுவே அவர் வரலாற்றில் பிரபலமானத் திருத்தந்தையாக இருந்தார் என்பதைக் காட்டியது என்றும் அவர் தெரிவித்தார்.
அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், 2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி தனது 84வது வயதில் இறைபதம் அடைந்தார். அவர் 1978ம் ஆண்டு பாப்பிறையான அக்டோபர் 22ம் தேதியை அவரது திருவிழா நாளாக அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.