2011-06-24 15:35:28

உடம்பில் பட்டவுடனே போதையை ஏற்படுத்தும் புதுவித போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக ஐ.நா.எச்சரிக்கை


ஜூன்24,2011. கொக்கெய்ன், ஹெரோய்ன், கானபிஸ் போன்ற போதைப் பொருள்களின் புழக்கம் உலகளாவியச் சந்தைகளில் குறைந்தோ அல்லது அதிகரிக்காமலோ இருக்கும்வேளை, உடம்பில் பட்டவுடனே போதையை ஏற்படுத்தும் புதுவிதப் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக ஐ.நா.வின் ஆண்டறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
உலக போதைப்பொருள் அறிக்கை 2011 என்ற தலைப்பில் அறிக்கை சமர்ப்பித்த ஐ.நா.வின் போதைப் பொருள் மற்றும் குற்றக் கட்டுப்பாட்டு அலுவலக இயக்குனர் Yury Fedotov, ‘designer drugs’ என்று சொல்லப்படும் அழகுசாதனப் பொருள்களில் சட்டத்துக்குப் புறம்பே பயன்படுத்தப்படும் போதைப் பொருள்கள் உலகச் சந்தைகளில் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளார்.
உலகில் 15க்கும் 64 வயதுக்கும் உட்பட்ட சுமார் 21 கோடிப்பேர் அதாவது உலக மக்கள் தொகையில் 4.8 விழுக்காட்டினர் இந்த விதமானப் புதிய போதைப்பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் என்று அவ்வறிக்கை எச்சரிக்கிறது.
இது குறித்துப் பேசிய பான் கி மூன், போதைப்பொருள்களுக்கு அடிமையாவது ஒரு நோயாகும், எனவே இந்நோயாளிகளை மருத்துவ நிபுணர்களும் உளவியல் ஆலோசகர்களும் கையாள வேண்டும் என்றார்.








All the contents on this site are copyrighted ©.