2011-06-22 16:05:35

திருத்தந்தையின் புதன் பொதுமறைப்போதகம்.


ஜூன் 8, 2011. உரோம் நகரில் காலையிலேயே வெயில் சுட்டெரிக்கத் துவங்கியுள்ளது. வெயிலின் தாக்கம் சென்னையில் இருப்பது போன்ற ஓர் உணர்வைத் தந்துக் கொண்டிருக்கிறது. இவ்வாண்டு உரோம் நகரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் அச்சுறுத்திக்கொண்டே இருக்கும் நிலையிலும், சுற்றுலா மற்றும் திருப்பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. வெயிலையும் பொருட்படுத்தாமல் திருத்தந்தையின் பொது மறைபோதகத்திற்கு வரும் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவரும் பங்குபெற உதவும் வண்ணம், தூய பேதுரு வளாகத்திலேயே திருத்தந்தையின் இவ்வார புதன் பொது மறைபோதகம் இடம்பெற்றது.
கிறிஸ்தவ செபம் குறித்த நம் மறைக்கல்விப் போதனைகளில், செபத்திற்கான எடுத்துக்காட்டுகளாக இருக்கும் சில பழைய ஏற்பாட்டு நபர்களைக் குறித்து கடந்த வாரங்களில் நோக்கியுள்ளோம் என தன் புதன் மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை. இப்போது நாம் விவிலியத்தின் மிக உயரிய செபப் புத்தகமான 'திருப்பாடல்கள்' குறித்து நோக்குவோம். இறைவனே நமக்கு வழங்கியுள்ள வார்த்தைகளின் உதவியோடு நம் அனுபவங்கள் முழுமையையும், நம் உணர்வுகளையும் வெளிப்படுத்தி நாம் இறைவனுடன் பேசும் வழி குறித்து, இறைவனின் தூண்டுதலால் எழுதப்பட்ட இத்திருப்பாடல்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன. இலக்கிய வடிவங்களில் வேறுபட்டு நின்றாலும், மனித பலவீனங்களைப் புரிந்துகொண்டு செயல்படும் அன்புநிறை இறைவனுக்கானப் புகழுரை மற்றும் தாழ்மையுடன் கூடிய வேண்டுதல்கள் என்ற ஒன்றுக்கொன்றுத் தொடர்புடைய இரு கூறுகளினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன திருப்பாடல்கள். எபிரேய மொழியில் 'திருப்பாடல்கள்' என்பது தெஹெல்லியம் அல்லது புகழ்பாடல்கள் என்று அழைக்கப்படுகின்றது. புகழ்ச்சியின் செபம் என்பது, துன்ப நேரத்திலும் எப்போதும் நம் அருகாமையிலேயே இருக்கும் இறைவனுக்கான நம் மிகச்சிறந்தப் பதிலுரையாகும். இயேசுகிறிஸ்துவிலும் அவரின் பாஸ்கா மறையுண்மையிலும் திருப்பாடல்கள் தங்கள் ஆழமான அர்த்தத்தையும் இறைவாக்கு நிறைவேறுதலையும் கண்டுகொள்கின்றன. திருப்பாடல்களின் வார்த்தைகளைக் கொண்டு இயேசுவும் செபித்தார். இறைவனின் தூண்டுதல் பெற்ற இந்த புகழ்ச்சியின் பாடல்களை நோக்கும் நாம், விண்ணகத் தந்தையாம் இறைவனை நோக்கி இயேசு கிறிஸ்துவோடு, இயேசுகிறிஸ்துவில் செபிக்கக் கற்றுத்தரும்படி ஆண்டவராம் இயேசுகிறிஸ்துவையே நோக்கி வேண்டுவோம்.
இவ்வாறு இவ்வார புதன் மறைபோதகத்தை தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கியத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.