2011-06-22 14:51:33

சத்தீஸ்கர் மாநிலத்தில் பஜ்ரங்தள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய கிறிஸ்தவர்களின் அகில உலகக் குழு கண்டனம்


ஜூன் 22,2011. அமைதியாக இயங்கி வரும் ஒரு கிறிஸ்தவ சபை மீது நடத்தப்பட்ட வன்முறை, மத சார்பற்ற இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரத்திற்கு எதிரான ஒரு செயல் என்று இந்திய கிறிஸ்தவர்களின் அகில உலகக் குழு அறிவித்துள்ளது.
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள Gurur என்ற இடத்தில் உள்ள அருள் கிறிஸ்தவ சபையைச் (Grace Church) சார்ந்த கிறிஸ்தவர்கள் தங்கள் வழிபாட்டில் கலந்து கொண்டபோது, பஜ்ரங்தள் எனப்படும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் இளையோர் குழுவைச் சேர்ந்த 40 பேர் அந்த வழிபாட்டை நிறுத்தியதோடு, அங்கு இருந்த கிறிஸ்தவர்கள் விரைவில் அந்த ஊரை விட்டே வெளியேற வேண்டும் என்றும் அச்சுறுத்தியதாக ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
எவ்விதக் காரணமும் இன்றி பஜ்ரங்தள் இளையோர் மேற்கொண்ட இந்த வன்முறை, எந்த ஒரு நாகரீக சமுதாயத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததென்று இந்திய கிறிஸ்தவர்களின் அகில உலகக் குழுவின் தலைவர் Sajan K. George கூறினார்.
இந்தியாவில் மதமாற்றத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள ஐந்து மாநிலங்களில் சத்தீஸ்கர் மாநிலமும் ஒன்று என்பதைச் சுட்டிக் காட்டிய George, இந்த ஒரு சட்டத்தைக் காட்டி, கிறிஸ்தவர்கள் பல வழிகளில் இந்த மாநிலத்தில் சிறைப்படுத்தப்படுகின்றனர் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.