2011-06-22 14:51:46

ஐ.நா.வின் பொதுச்செயலராக தொடர்ந்து பணியாற்ற திருவாளர் பான் கி மூன் மீண்டும் தேர்வு


ஜூன் 22,2011. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவை, இச்செவ்வாயன்று இரவு ஐ.நா.வின் பொதுச்செயலராக தொடர்ந்து பணியாற்ற திருவாளர் பான் கி மூன் அவர்களை தேர்ந்தெடுத்தது.
இவ்வாண்டு ஜூன் 13ம் தேதி தன் 67வது வயதை நிறைவு செய்த பான் கி மூன், தென் கொரியாவில் பிறந்து, அந்நாட்டின் அயல்நாட்டுத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். இவர் ஐ.நா.வின் எட்டாவது பொதுச் செயலராகப் பதவியேற்றார். இவருக்கு முன் இப்பதவியை வகித்த கோபி அன்னனுக்குப் பிறகு, 2007ம் ஆண்டு பான் கி மூன் இப்பொறுப்பை ஏற்றார். 2012ம் ஆண்டு சனவரியில் முடிவடையும் இவரது முதல் ஐந்து ஆண்டுகள், மேலும் ஓர் ஐந்தாண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இவர் 2012 சனவரி முதல் 2017 டிசம்பர் வரை ஐ.நா. பொதுச் செயலராக பணியாற்றுவார்.
தனக்கு இரண்டாம் முறையாக இப்பொறுப்பை வழங்கிய பொது அவை உறுப்பினர்களுக்குத் தன் நன்றியைக் கூறிய பான் கி மூன், இப்பணியில் இன்னும் தான் செய்யவேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன என்று கூறினார்.
மில்லேன்னிய முன்னேற்ற இலக்குகள் (Millennium Development Goals) 2015ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது நமது கனவு என்பதால், நமது பணிகளும் இன்னும் அதிக ஆர்வமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார் பான் கி மூன்.
பொது அவை முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய பான் கி மூன், உலகத்திற்கு முன் இருக்கும் பல சவால்களைச் சந்திக்க உலக நாடுகள், உலக அமைப்புக்கள், இன்னும் பல குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.