2011-06-22 14:51:22

அகில உலக தொழிலாளர் அமைப்பின் (ILO) முடிவை இந்திய ஆயர் பேரவை பெரிதும் வரவேற்றுள்ளது


ஜூன் 22,2011. இல்லங்களில் பணி புரிவோருக்கும் ஏனைய தொழிலாளர்களுக்குரிய உரிமைகளை வழங்கியுள்ள ILO எனப்படும் அகில உலக தொழிலாளர் அமைப்பின் முடிவை இந்திய ஆயர் பேரவை பெரிதும் வரவேற்றுள்ளது.
இல்லங்களில் பணி புரிவோருக்கான இயக்கங்களை இந்தியாவில் உருவாக்க கடந்த 26 ஆண்டுகளாக இந்திய ஆயர் பேரவை முயன்று வந்துள்ளது என்றும், ஆயர் பேரவையின் இந்த முயற்சிக்கு தற்போது அகில உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும், இப்பேரவையின் தொழில் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை ஜோஸ் வட்டக்குழி கூறினார்.
கடந்த வாரம் ஜெனீவாவில் நடைபெற்ற கருத்தரங்கில் ILO வின் இந்த முடிவை ஆதரித்து வாக்களித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், இந்த முடிவை இந்தியாவில் நடைமுறைப் படுத்தி, இல்லப்பணியாளர்கள் தொழிற்சங்கங்கள் அமைக்கவும் அவர்கள் உரிமைகளுக்கு போராடவும் உரிய வழிகளை இந்திய அரசு நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய ஆயர் பேரவை அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும் என்று அருள்தந்தை வட்டக்குழி கூறினார்.
உலகெங்கும் இன்று 5 கோடியே 26 இலட்சம் இல்லப்பணியாளர்கள் உள்ளனர் என்றும், இவர்களில் ஆசியாவில் பணி செய்யும் ஒரு கோடியே 20 இலட்சம் பணியாளர்களில் 90 இலட்சம் பேர் பெண்கள் என்றும் ILO வெளியிட்ட அறிக்கையொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.