2011-06-21 16:28:30

விவிலியத் தேடல்


RealAudioMP3
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது.
கற்பனை வளமும், கருத்தாழமும் மிகுந்த இந்த பாடல் வரிகள் கவியரசு கண்ணதாசனின் கைவண்ணம்.
“யானையின் பலம் தும்பிக்கையில், மனிதரின் பலம் நம்பிக்கையில்” என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம். நீரில் இருக்கும்போது, முதலையின் சக்தி எப்படிப்பட்டதென்று நாம் அறிவோம். ஒவ்வொரு உயிரினத்திற்கும் உடலின் சில பகுதிகளில் கூடுதல் சக்தியுண்டு; இவ்வுயிரினங்கள் இருக்க வேண்டிய இடத்தில், சூழ்நிலையில் இருந்தால், இந்த சக்தி இன்னும் பல மடங்காகப் பெருகும்.
பரமசிவனின் கழுத்தில் இருக்கிறோம் என்ற தைரியத்தில் பாம்பு கருடனை நையாண்டியாகக் கேட்பதுபோல் இந்த வரிகளை கண்ணதாசன் எழுதியிருந்தார். சிவன் கழுத்தைவிட்டு பாம்பு இறங்கி விட்டால், அல்லது இறக்கி விடப்பட்டால், கருடனுக்கு முன் அதன் கதி என்னவாகும் என்று நமக்குத் தெரியும். இந்தத் திரைப்படப் பாடலில் அதையும் கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் - உன்
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்

பாம்பு தன் புற்றை விட்டு வெளியேறினால் அதை ஆபத்துக்கள் சூழும். வானில் பறக்கும் பறவைகளிலேயே மன்னனென்று புகழப்படுவது கருடன் அல்லது கழுகு. அது பறக்கும் உயரம், பறக்கும் அழகு, அந்த உயரத்திலிருந்து தன் இரையைக் குறிபார்த்து பாய்ந்து வந்து தாக்கும் வேகம் என்றெல்லாம் கழுகின் பல அம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தக் கழுகைப் பிடித்து, அதன் சிறகுகளை வெட்டிவிட்டால், அதைப் போன்ற ஒரு பரிதாபமான உயிரைப் பார்க்க முடியாது. சிறகு வெட்டப்பட்ட கழுகும், அதன் அருகில் ஊர்ந்து செல்லும் பாம்பும், புழுவும் ஒரே நிலையில் இருக்கும்.
இப்படி ஒரு நிலையை 42, 43 ஆகிய திருப்பாடல்களில் விவரிக்கிறார் ஆசிரியர். அவரது சக்தியாக இருந்த இறைவனை விட்டு அவர் பிரிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பழக்கமில்லாத வேற்று நாட்டிலே, வேற்று இனத்தவரிடையே அவர் அகப்பட்டுக் கொண்டார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், அல்லது காயத்தின் மேல் மிளகாய்த் தூளைத் தேய்ப்பது போல் அந்த வேற்றினத்தார் மீண்டும், மீண்டும் திருப்பாடல் ஆசிரியரிடம், "உன் கடவுள் எங்கே?" என்ற கேள்வியைக் கேட்டு, அவரைச் சித்ரவதைச் செய்கின்றனர். இந்தத் துயரங்களிலிருந்து திருப்பாடல் ஆசிரியர் மீள்வதற்கு வழி உண்டா? என்ற கேள்வியுடன் நமதுத் தேடலைச் சென்றவாரம் முடித்தோம். இன்று தொடர்கிறோம்.

துயரத்தின் அடிமட்டத்திற்குச் சென்று விட்ட ஒருவருக்கு அங்கிருந்து மீள்வதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. மேலே வருவது மட்டுமே அவருக்குள்ள ஒரே வழி. “When you come to the end of the rope, make a knot and hang on.” “வாழ்வு என்ற கயிற்றில் நீ தொங்கிக் கொண்டிருக்கும்போது, ஏமாற்றங்களால் பிடி தளர்ந்து, வழுக்கி, அந்தக் கயிற்றின் இறுதி முனைக்கு நீ வரும்போது, அங்கு ஒரு முடிச்சைப் போட்டு, தொடர்ந்து அந்தக் கயிற்றில் தொங்கிக்கொண்டிரு.”
இந்தக் கூற்றுக்குச் சொந்தக்காரர் FDR என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற அமெரிக்க அரசுத்தலைவர் Franklin Delano Roosevelt. வாழ்க்கைக் கயிற்றில் பிடிதளர்ந்து, இறுதிக் கட்டத்திற்கு வருவது என்றால் என்ன என்பதைத் தன் சொந்த வாழ்விலேயே முற்றிலும் அனுபவித்தவர் Roosevelt. தன் வாழ்வின் பிற்பகுதியைச் சக்கர நாற்காலியில் செலவிட்ட இவர், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே, அமெரிக்க அரசுத்தலைவராக மும்முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியாற்றினார். இவரது காலத்தில் அமெரிக்கா பொருளாதாரத்தில் மிகவும் சரிந்தது. இதைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. திருப்பாடல் ஆசிரியரைச் சூழ்ந்த பிரச்சனைகளைப் போலவே, Rooseveltன் தனிப்பட்ட வாழ்வையும், பொது வாழ்வையும் பிரச்சனைகள் கூட்டமாய்த் துரத்தி வந்தன.

பிரச்சனைகள் கூட்டமாய்த் துரத்தும்போது அவைகளை எதிர்த்து போராடுவதற்கு, அல்லது அவை ஒரு மலைபோல நம்மீது விழுந்து, நம்மைத் தரையோடு தரையாக நசுக்கும்போது எழுந்து நிற்பதற்கு மனதில் நம்பிக்கை வேண்டும். இந்த நம்பிக்கையைப் பல வழிகளில் நாம் வளர்த்துக் கொள்ளலாம். அவைகளில் ஒன்று... நம் வாழ்வில் நடந்த நல்லவைகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அசைபோடுவதன் மூலம், மனதில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளலாம். இந்த வழியைத் திருப்பாடல் ஆசிரியர் பின்பற்றுகிறார்.
திருப்பாடல் 42: 4
மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப்பாடல்களும் முழங்க விழாக்கூட்டத்தில் நடந்தேனே!
கடவுளின் கோவிலுக்கு மக்களுடன் சென்ற அந்த அனுபவத்தை அவர் அசைபோடுகிறார். திருப்பாடலின் ஆசிரியரான தாவீது இறைவனின் இல்லத்திற்கு நடந்து மட்டும் சென்றவரல்ல. ஆடிப்பாடி மகிழ்ந்து சென்றவர். கடவுளுக்கு முன் அவர் தன்னையே மறந்து ஆடியதாக நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம்.
சாமுவேல் - இரண்டாம் நூல் 6 14-15
நார்ப்பட்டால் நெய்யப்பட்ட ஏபோதை அணிந்து கொண்டு, தாவீது தம் முழுவலிமையோடு ஆண்டவர் முன்பாக நடனமாடிக் கொண்டிருந்தார். தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத்தோடும் எக்காள முழக்கத்தொடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.
அரசனாக இருந்த தாவீது, தன் மதிப்பை மறந்து இறைவனுக்கு முன் நடனமாடியதை சவுலின் மகள் மீக்கால் பழித்து கூறியபோது, தாவீது அவரிடம், ஆண்டவரின் மக்கள் மீதும் இஸ்ரயேல் மீதும் தலைவனாக இருக்குமாறு உன் தந்தையையும் அவர் தம் வீட்டாரையும் ஒதுக்கிவிட்டு, என்னைத் தேர்ந்து கொண்ட ஆண்டவர் திருமுன் நான் ஆடினேன்: இன்னும் ஆடுவேன். நான் என்னை இன்னும் கடையவனாக்கிக் கொள்வேன். (சாமுவேல் - இரண்டாம் நூல் 6 21-22) என்று தாவீது தயக்கமின்றி கூறுகிறார்.

இறைவனின் கோவில், திருமலை ஆகியவற்றில் திருப்பாடல் ஆசிரியர் மகிழ்வின் சிகரங்களைத் தொட்டிருப்பதால், அவைகளை எண்ணிப் பார்த்து, தன் நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார்.
திருப்பாடல் 43: 3-4
உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்: அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்: என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்: கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன்.
துன்பம் நம்மிடம் உருவாக்கும் மாற்றங்களைக் கூற ஒரு பழமொழி உண்டு. “Affliction never leaves us as it finds us...” "துன்பங்கள் நம்மை வந்தடைந்து, பின் செல்லும்போது, நாம் இருந்த அதே நிலையில் நம்மை அவை விட்டுச் செல்வதில்லை." ஒன்று அவை நம்மை முற்றிலும் நொறுக்கி, விரக்தியின் எல்லைக்குக் கொண்டு செல்லும். அல்லது, நம்மைப் புடமிட்டு, மெருகேற்றி உறுதியாய் எழுந்து நிற்கச் செய்யும்.

கடவுள் நம்பிக்கை இருந்துவிட்டால், துன்பங்கள் மாயமாய் மறைந்துவிடும், கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் மனத்தளர்ச்சியே அடைய மாட்டார்கள் என்று ஒரு சில சமயங்களில் மறையுரைகளில் கேட்டிருக்கிறேன், புத்தகங்களில் வாசித்திருக்கிறேன். இந்த எண்ணத்தை ஏற்றுக் கொள்ள எனக்குள் ஏகப்பட்ட தயக்கம்.
'ஆண்டவர் என் ஆயன்' என்ற திருப்பாடல் 23ன் தேடல்களில் நாம் பல முறை கூறியதை மீண்டும் நினைவுகூருவோம். இறைவன் வந்துவிட்டால், அவர் மீது நம் நம்பிக்கை வளர்ந்துவிட்டால் இந்த உலகம் அற்புதமாக, ஆனந்தமயமாக மாறிவிடும் என்று கனவு காண்பது தவறு. இந்த உலகம் தொடர்ந்து நமக்குத் துன்பங்களைத் தந்த வண்ணம் இருக்கும். ஆனால், அந்தத் துன்பங்களைத் தாண்டி, நாம் பயணம் மேற்கொள்ள, அல்லது அந்தத் துன்பங்களுடனேயே நமது பயணத்தை எளிதாக்க இறைவன் நம்மோடு பயணம் வருவார். நம் துயரங்களை அவரும் சுமப்பார். இந்த நம்பிக்கையில்தான் திருப்பாடலின் ஆசிரியர் தன் துயரங்களில் இருந்து விடுதலை தேடிக் கொள்கிறார்.
நம்பிக்கையை வெளிப்படுத்தும் வரிகள் இவ்விருத் திருப்பாடல்களிலும் மும்முறை ஒலிக்கின்றன. பல்லவிபோல் கூறப்பட்டுள்ள இவ்வரிகளுடன் நமது தேடலை நாம் நிறைவு செய்வோம்.
திருப்பாடல் 42: 5, 11 43: 5
என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு: என் கடவுளின் மீட்புச்செயல்களை முன்னிட்டு, இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.








All the contents on this site are copyrighted ©.