2011-06-20 16:19:24

பாகிஸ்தானின் தேவநிந்தனைச் சட்டத்தில் மாற்றம் கோரி இலண்டனில் பேரணி


ஜூன் 20, 2011. பாகிஸ்தானின் தேவநிந்தனைச் சட்டத்தில் மாற்றங்கள் கொணரப்படவேண்டும் என அழைப்பு விடுத்து, ஜூலை மாதம் 2ந்தேதி இலண்டனில் அனைத்து மதத்தினரும் பங்கு கொள்ளும் பேரணி ஒன்று இடம்பெற உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கிறிஸ்தவர்கள் மீதான 14 தாக்குதல்களுக்குக் காரணமான இந்தச் சட்டம் மாற்றப்படவேண்டும் என குரல் கொடுத்துவரும் கிறிஸ்தவச் சபைகள், இப்பேரணியின்போது பிரித்தானிய அரசு அதிகாரிகளைச் சந்தித்து, பாகிஸ்தானின் தேவ நிந்தனைச் சட்டம் மாற்றப்படவும், பாகிஸ்தான் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பிற்கு உறுதி வழங்கப்படவும் பாகிஸ்தான் அரசை வலியுறுத்தவேண்டும் என விண்ணப்பம் ஒன்றை வழங்க உள்ளன. தேவநிந்தனை என்பதன் அர்த்தத்தை மரணமாக பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் பார்ப்பதாக உரைத்த 'Aid to the Church in Need' என்ற பிறரன்பு அமைப்பின் அதிகாரி Neville Kyrke-Smith, தேவநிந்தனைச் சட்டம் பாகிஸ்தானில் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்தக் கவலையையும் வெளியிட்டார்.
இதனை கிறிஸ்தவர்களின் பிரச்சனை என்று மட்டும் பார்க்கக்கூடாது, ஏனெனில் இதனால் அனைத்து மதத்தினரும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்ற அதிகாரி Smith, கடந்த 10 ஆண்டுகளில் குறைந்த பட்சம் 50 கிறிஸ்தவர்கள் தேவ நிந்தனைச் சட்டம் மூலம் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.