2011-06-20 16:16:44

ஜூன் 21 வாழ்ந்தவர் வழியில் .....


கே. வி. மகாதேவன் ஒரு தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர். 1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 இல் முருகனே என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.
திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், கந்தன் கருணை, தாய் சொல்லைத் தட்டாதே, படிக்காத மேதை, வசந்த மாளிகை எனப் பல புகழ் பெற்றத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
கந்தன் கருணை மற்றும் சங்கராபரணம் ஆகிய படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் கே. வி. மகாதேவன். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார்.
தமிழ்நாட்டின் தென்பகுதியில் நாகர்கோவில் என்ற ஊரில் கிருஷ்ணன் கோவில் என்ற சிற்றூரில் 1918ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி மகாதேவன் பிறந்தார். இவரது பாட்டனார் ராம பாகவதர் திருவனந்தபுரம் அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர். தந்தை வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர். சிறு வயதிலேயே இசையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார்.
பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து பம்பாய் ஐதராபாத், தில்லி, நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார்.
மகாதேவன் 1942 முதல் மனோன்மணி, பக்தகௌரி, அக்கினி புராண மகிமை, பக்த ஹனுமான், நல்ல காலம், மதன மோகினி ஆகிய படங்களுக்கு இசை அமைத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இவர் 2001ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி இறந்தார்








All the contents on this site are copyrighted ©.