2011-06-18 17:23:43

2011ல் நான்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்தியா திட்டம்


ஜூன் 18,2011. இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம் 2011ம் ஆண்டில், 4 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ளதாக, அதன் தலைவர் எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியிலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் திரவ திட்ட இயக்க மையத்தில் இடம்பெற்ற இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கில் உரையாற்றிய இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன், இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்திற்கு மிகவும் பரபரப்பான இந்த ஆண்டில் அடுத்தடுத்து செயற்கைகோள்களை ஏவ உள்ளதாகத் தெரிவித்தார்.
விண்வெளியின் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிறுத்தும் திறன்படைத்த 6 நாடுகளில் ஒன்றான இந்தியா, இதுவரையில் 55 செயற்கைக்கோள்களை ஏவி உள்ளதாகவும், அவற்றில் 20 செயற்கைக்கோள்கள் தற்போதும் பயன்பாட்டில் உள்ளன என்றும் கூறினார்.
இந்தியாவின் அடுத்த நீண்டகால இலக்கு செவ்வாய் கிரகத்திற்கு செல்வது எனக்கூறிய இஸ்ரோ தலைவர், செவ்வாய்க்கு பயணிக்க 300 நாட்கள் ஆகும் என்பதால், அத்தனை நாட்கள் செல்லும் அளவு எரிபொருள் ஏற்படுத்துவது குறித்த ஆராய்ச்சிகளும் நடக்கிறது என மேலும் தெரிவித்தார்.
இந்த இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கில் இந்தியா முழுவதிலும் இருந்து விண்வெளி அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் 400 பேர் பங்கேற்றனர்.








All the contents on this site are copyrighted ©.