2011-06-17 14:25:49

காரித்தாஸ் மேற்கொண்ட முயற்சிகளால் இலங்கை மீனவர்கள் விடுதலை


ஜூன் 17,2011. சொமாலியா நாட்டுக் கடற்கொள்ளைக் காரர்களால் தாக்கப்பட்டு, பின்னர் இந்திய அரசின் காவலில் ஆறு மாதங்கள் வைக்கப்பட்டிருந்த நான்கு இலங்கை மீனவர்கள் காரித்தாஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் மேற்கொண்ட முயற்சிகளால் அண்மையில் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கை, மற்றும் இந்தியக் காரித்தாஸ் அமைப்பைச் சார்ந்தவர்களின் உதவிகள் இல்லையெனில் சிறைப் படுத்தப்பட்ட இந்த மீனவர்களின் விடுதலை மிகவும் கடினமாகியிருக்கும் என்று இலங்கை காரித்தாஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான S.P.அந்தோணிமுத்து கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆறு பேர் கொண்ட ஒரு மீனவப் படகை, சொமாலியா நாட்டைச் சார்ந்த கடற்கொள்ளைக் காரர்கள் தாக்கி, அவர்களைப் பிணைக் கைதிகளாக எடுத்துச் சென்றனர். இந்த அறுவரில் நான்கு பேரை அவர்கள் விடுவித்தபோது, அவர்களை இந்திய கடற்படையினர் டிசம்பர் மாதத்தில் கைது செய்தனர்.
கடந்த ஆறு மாதங்களாய் காரித்தாஸ் இந்திய அரசுக்கு எழுதி வந்த நூற்றுக்கணக்கான கடிதங்கள், மற்றும் தொலைப்பேசி அழைப்புக்கள் ஆகிய முயற்சிகளின் பலனாக இந்த விடுதலை கிடைத்துள்ளதென்று அந்தோணிமுத்து கூறினார்.
இச்செவ்வாயன்று இலங்கை வந்தடைந்த நால்வரும் காரித்தாஸ் உதவி இன்றி தாங்கள் இன்னும் சிறையிலேயே இருந்திருப்போம் என்றும், காரித்தாஸுக்கு தாங்கள் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றும் கூறினர்.









All the contents on this site are copyrighted ©.