2011-06-16 13:48:56

சுற்றுலாப் பயணிகளின் ஒழுங்கு முறைகளைத் திட்டமிடும் கோவாத் தலத்திருச்சபை


ஜூன் 16,2011. சுற்றுலாப் பயணிகளின் உடைகள் குறித்தும் வழிபாட்டுத்தலங்களில் அவர்கள் நடந்து கொள்ளும் முறை குறித்தும் இந்துக் கோவில்களில் விதிக்கப்பட்டிருக்கும் ஒழுங்கு முறைகளைப் போல் கோவாத் தலத்திருச்சபையும் ஒழுங்கு முறைகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது.
புனித பிரான்சிஸ் சேவியரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் Bom Jesu என்ற புகழ்பெற்ற பசிலிக்காப் பேராயலத்தில் சுற்றுலாப் பயணிகள் பல நேரங்களில் தகுந்த முறையில் நடந்து கொள்வதில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய அப்பேராலய அதிபர் அருள்தந்தை சாவியோ பரெட்டோ, பேராலயத்தின் புனிதத் தன்மையைக் காப்பதற்கு ஒழுங்கு முறைகளைச் சுமத்த வேண்டியுள்ளது என்று கூறினார்.
கோவிலுக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உடுத்த வேண்டிய உடை, புகைப்படங்கள் எடுக்கும் விதிமுறைகள் ஆகியவை குறித்த ஒழுங்கு முறைகளை கோவிலின் பல இடங்களில் மக்கள் பார்வைக்கு வைக்கத் திட்டங்கள் இருப்பதாக அருள்தந்தை பரெட்டோ கூறினார்.
Bom Jesu பசிலிக்கா பேராலயம் இந்தியாவின் தொல்பொருள் பாதுக்காப்புப் பிரிவின் மேற்பார்வையில் இருப்பதால், புகைப்படங்கள் எடுப்பது குறித்து பேராலய நிர்வாகிகள் தடைகள் விதிப்பதற்கு அத்துறையினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.









All the contents on this site are copyrighted ©.