2011-06-15 16:19:08

பாகிஸ்தானில் நிலத்தின் குத்தகையாளர்கள் உரிமையாளர்களாய் ஆகும் வழிமுறைகளைக் கூறும் ஆலோசனை மையம்


ஜூன் 15,2011. கிறிஸ்தவ மறையின் நீதி குறித்த படிப்பினைகள் சொல்லித் தரும் வழிகளில் செல்வதற்கு நாங்கள் தயங்கமாட்டோம் என்று பாகிஸ்தான் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
நிலத்தின் குத்தகையாளர்கள் அந்த நிலத்திற்கு உரிமையாளர்களாய் ஆகும் போராட்டத்தில் அவர்களுக்குத் தகுந்த வழிமுறைகளைக் கூறும் ஓர் ஆலோசனை மையத்தின் அடிக்கல்லை இத்திங்களன்று நாட்டிய பைசலாபாத் ஆயர் Joseph Coutts இவ்வாறு கூறினார்.
1947ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் பத்து மாவட்டங்களில் உள்ள நிலக் குத்தகைக்காரர்கள் தொடர்ந்து தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர்.
1999ம் ஆண்டு முதல் இந்த போராட்டங்கள் உச்ச நிலையை அடைந்துள்ளன என்றும், அப்பகுதியில் உள்ள 27,518 ஹெக்டேர் நிலப்பகுதிக்காக இந்தப் போராட்டம் நடைபெறுகிறதென்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
அப்பகுதியில் உள்ள கிராமத்து விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குரிய உரிமைக்காகப் போராடி வருவதால், இந்த மையத்தின் மூலம் அவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தலத் திருச்சபை செய்யும் என்று அப்பகுதியில் பணிபுரியும் பங்குத்தந்தை James Archangelus கூறினார்.








All the contents on this site are copyrighted ©.