2011-06-15 16:16:26

திருத்தந்தையின் புதன் பொதுமறைப்போதகம்.


ஜூன் 15, 2011. இத்தாலியில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு கோடை விடுமுறை காலம் துவங்கியுள்ள நிலையில், திருப்பயணிகள் கூட்டம் உரோம் நகரை நிறைத்து வருகின்றது. கோடை வெயிலின் தாக்கம் இந்தப் புதனன்று அதிகமாக இருந்த போதிலும், திருத்தந்தையின் புதன் மறைபோதகத்தைக் கேட்க வந்தக் கூட்டத்திற்கு குறைவில்லை. கூட்டம் அதிகமாக இருந்ததால், வெயிலையும் பொருட்படுத்தாமல், தூய பேதுரு பேராலய வளாகத்திலேயே பொது மறைபோதகத்திற்கு ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது.
கிறிஸ்தவ செபம் குறித்த நம் மறைபோதகத் தொடரில், பரிந்துரைச் செபத்திற்கான எடுத்துக்காட்டாக இறைவாக்கினர் எலியா குறித்து இன்று நோக்குவோம் என இவ்வார புதன் மறைப்போதகத்தை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இஸ்ரயேல் அரசாட்சியில் பாகால் வழிபாடும் பல்சமய இணைப்புக் குளறுபடிகளும் பரவி வந்த காலத்தில் இறைவாக்கினர் எலியா, இறைவனுடன் ஆன உடன்படிக்கையை புதுப்பிக்கவும், சிலைவழிபாடுகளை மறுத்து ஒதுக்கவும் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். கார்மல் மலையில் எலியா, பாகால் குருக்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிகழ்வில், அவர் இஸ்ராயேல் மக்களை நோக்கி இறைவனைத் தேர்வுச் செய்யும்படிக் கூறி, அவர்களின் மனமாற்றத்திற்காகச் செபிக்கிறார். தன்னருகே நெருங்கி வந்து தன் செபத்தில் பங்குகொள்ளுமாறு மக்களை வலியுறுத்துகிறார். எலியாவின் செபத்திற்கு பதிலளிக்கும் விதமாக வானிலிருந்து நெருப்பை அனுப்பி அதன் மூலம் தன் மீட்பு வல்லமையையும், இரக்கத்தையும் அன்புறுதியையும் வெளிப்படுத்துகிறார் இறைவன். தன்னிடம் திரும்பி வரவும், அவர்களின் முன்னோர்களுடன் செய்யப்பட்ட உடன்படிக்கையை மீண்டும் உறுதிச்செய்யவும் ஊக்கமளிக்கிறார்.
எலியாவின் எடுத்துக்காட்டைக் காணும் நாம், பரிந்துரைச் செபத்தின் வல்லமை குறித்து மேலும் உறுதிப்பாடான நம்பிக்கை கொண்டவர்களாய் செயல்படுவோம். அதன்வழி, மக்கள் ஒரே உண்மை கடவுள் குறித்து அறியவும், சிலைவழிபாட்டின் அனைத்து நிலைகளில் இருந்தும் விலகி நிற்கவும், தூய ஆவியின் நெருப்பு மற்றும் சிலுவையில் வழங்கப்பட்ட அருளைப்பெறவும் உதவுவோம்.
இவ்வாறு தன் மூவேளை செப உரையை வழங்கியத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.