2011-06-15 16:19:24

சிரியாவைக்குறித்த தவறான செய்திகள் பரவுவதைத் தடுக்க கிறிஸ்தவர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் - ஆயர் Antoine Audo


ஜூன் 15,2011. சிரியாவில் தற்போது உறுதியற்ற நிலையை உருவாக்கவும், அந்நாட்டை ஓர் இஸ்லாமியச் சூழலுக்கு மாற்றவும் முயன்று வரும் சக்திகளை அரசு அடக்க முயல்வது சரியான ஒரு வழியே என்று அந்நாட்டின் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
சிரியாவின் அரசுத்தலைவர் Bashar al-Assad அந்நாட்டில் ஆரம்பமாகியுள்ள கலவரங்களை அடக்க மேற்கொண்டுள்ள முயற்சிகளை ஆதரித்து, சிரியாவில் மக்களிடையே நன்மதிப்பு பெற்றுள்ள ஆயர் Antoine Audo இவ்வாறு தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.
சிரியாவில் உருவாகியிருக்கும் கலவரங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாத ஊடகங்கள், அரசுத் தலைவரின் முயற்சிகள் குறித்து தவறான செய்திகளைக் கூறுவதாகவும் ஆயர் Audo கூறினார்.
Aleppo என்ற கால்தீய ரீதி மறைமாவட்டத்தில் பொறுபேற்றிருக்கும் இயேசு சபையைச் சார்ந்த ஆயர் Antoine Audo, ஊடகங்களின் பொறுப்பற்ற செயல்களைக் குறை கூறினார்.
அரசுத் தலைவர் Assad பதவி விலகினால், சதாம் உசேன் காலத்து ஈராக்கைப் போல் சிரியாவும் உறுதியற்ற நிலையையும், இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சியையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஆயர் Audo எச்சரிக்கை விடுத்தார்.
சிரியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படவில்லை என்று ஊடகங்கள் சொல்லி வருவது தவறான செய்திகள் என்றும், இத்தகைய கருத்து பரவுவதைத் தடுக்க சிரியா நாட்டு மக்களும், கிறிஸ்தவர்களும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆயர் Audo வேண்டுகோள் விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.