2011-06-15 16:18:55

அயல்நாட்டுத் தொழிற்சாலையை அமைக்க ஒரிஸ்ஸா மாநில அரசு மக்களின் நிலங்களை அபகரித்துள்ளது


ஜூன் 15,2011. அயல்நாட்டுத் தொழிற்சாலை ஒன்றை உருவாக்குவதற்கென்று, ஒரிஸ்ஸா மாநில அரசு மக்களின் நிலங்களை அபகரித்துள்ளதை எதிர்த்து, ஒரிஸ்ஸா தலத்திருச்சபையும் மனித நல ஆர்வலர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
ஒரிஸ்ஸாவின் ஜகத்சிங்க்பூர் மாவட்டத்தில் POSCO என்ற தென் கொரிய நாட்டு நிறுவனத்தின் இரும்புத் தொழிற்சாலையை அமைக்க, அப்பகுதியில் வாழ்ந்துவரும் விவசாயிகளின் நிலங்களை, தகுந்த ஈட்டுத்தொகையைக் கொடுக்காமல் அரசு பறித்துக் கொண்டுள்ளதென்றும், இதை எதிர்த்த மக்களை அடக்க, இராணுவத்தை அப்பகுதியில் பயன்படுத்தியுள்ளதென்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தொகையை அளிக்காமல், அரசு இராணுவத்தின் மூலம் அடக்கு முறையைக் கையாண்டிருப்பது மக்களரசு என்பதையே கேலிக்குரியதாக மாற்றுகிறது என்று கட்டக்-புபனேஸ்வர் உயர்மறைமாவட்டத்தின் சமூகத்தொடர்புப் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை சந்தோஷ் திகால் கூறினார்.
இதற்கிடையே, பழங்குடி, மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த இம்மக்களுக்கு உரிய நீதியை வழங்காமல், அவர்கள் மீது வன்முறையைக் கையாள்வதை நிறுத்த வேண்டும் என்று நாடு தழுவிய கிறிஸ்துவ சபைகளின் தேசியக் குழு ஒரிஸ்ஸா அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.