2011-06-14 16:42:06

விவிலியத் தேடல்


RealAudioMP3
42, 43 ஆகிய இரு திருப்பாடல்களை ஒரே பாடலாக நாம் கருத முடியும் என்றும், இந்தப் பாடலில் மூன்று சரணங்களும் ஒரு பல்லவியும் உள்ளன என்றும் சென்ற வாரங்களில் நாம் சிந்தித்தோம். இந்தப் பாடலின் முதல் சரணத்தை சென்றவாரத் தேடலில் சிந்தித்தோம். இன்று இப்பாடலின் இரண்டாம் சரணத்தில் நம் தேடல் தொடர்கின்றது. திருப்பாடல் 42ன் 6 முதல் 10 வரையிலான திருவசனங்கள் இந்த இரண்டாம் சரணம். அந்தப் பகுதிக்கு இப்போது செவி மடுப்போம்.

திருப்பாடல் 42 6-10
என் நெஞ்சம் மிகவும் தளர்ந்துள்ளது: ஆகவே யோர்தான் நிலப்பகுதியிலும், எர்மோன், மீசார் மலைப்பகுதிகளிலும் உம்மை நான் நினைத்துக்கொண்டேன். உம் அருவிகள் இடியென முழங்கிட ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கின்றது: உம் சிற்றலைகளும் பேரலைகளும் என்மீது புரண்டோடுகின்றன. நாள்தோறும் ஆண்டவர் தமது பேரன்பைப் பொழிகின்றார்: இரவுதோறும் நான் அவரைப் பாடுவேன்: எனக்கு வாழ்வளிக்கும் இறைவனை நோக்கி மன்றாடுவேன். என் கற்பாறையாகிய இறைவனிடம் 'ஏன் என்னை மறந்தீர்: எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துயருடன் நடமாட வேண்டும்' என்கின்றேன். 'உன் கடவுள் எங்கே?' என்று என் பகைவர் நாள்தோறும் என்னைக் கேட்பது, என் எலும்புகளை ஊடுருவும் வாள்போல என்னைத் தாக்குகின்றது.

இந்த ஐந்து திருவசனங்களை நான் வாசித்தபோது, இவ்வரிகளில் காணப்படும் இலக்கணமும், இலக்கியமும் என் கவனத்தைக் கவர்ந்தன. முதலில், இவ்வரிகளில் நாம் காணும் ஒரு புதிரான இலக்கணத்தைப் பற்றிச் சிந்திப்போம். திருப்பாடலின் ஆசிரியர் இவ்வரிகளில் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களுக்குரிய சொற்றொடர்களைப் பயன்படுத்தியுள்ளார்.
உம்மை நான் நினைத்துக் கொண்டேன் என்ற வரி (42 6) இறந்த காலத்தைக் குறிக்கும் ஒரு வரி.
என் நெஞ்சம் தளர்ந்துள்ளது,
ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கின்றது,
பேரலைகள் என் மீது புரண்டோடுகின்றன,
ஆண்டவர் பேரன்பைப் பொழிகின்றார்
என்ற பல வரிகளில் நிகழ் காலம் ஒலிக்கிறது.
நான் அவரைப் பாடுவேன்,
இறைவனை நோக்கி மன்றாடுவேன்
என்ற வரிகளில் எதிர்காலத்தை உணர்த்துகிறார் ஆசிரியர்.

இறந்த காலம், நிகழ் காலம் எதிர் காலம் என்ற காலங்களைக் கலந்து திருப்பாடல் ஆசிரியர் எழுதியுள்ளதை நான் படித்தபோது, எபிரேய மொழியின் இலக்கணம் பற்றி ஒரு ஆச்சரியமான தகவல் எனக்குக் கிடைத்தது. எபிரேய மொழியில், அதுவும், விவிலியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள எபிரேய மொழியில் காலங்களைக் குறிப்பதற்குத் தனித் தனிச் சொற்கள் இல்லை என்று சொல்கிறார்கள். இந்தப் புதிரான இலக்கணமும் இஸ்ரயேல் மக்களின் எண்ணங்களை, முக்கியமாக, அவர்கள் வாழ்க்கைத் தத்துவங்களை அறிந்து கொள்ள ஒரு சிறந்த வழி.
காலத்தை நிர்ணயம் செய்வதோ, அல்லது அதற்கு இலக்கணம் வகுப்பதோ மனித முயற்சிகள் அல்ல, மாறாக, அவை கடவுளின் செயல் என்பதை எபிரேய இலக்கணம் நமக்குச் சொல்லித் தருகிறதோ என்று எண்ணிப் பார்க்கிறேன். அல்லது, இறைவனைக் காண முடியாததால் துயரத்தின் ஆழத்தில் புதைந்துள்ள திருப்பாடலின் ஆசிரியருக்கு இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் எல்லாமே ஒரே காலமாக, பிரிவுத்துயரில் உறைந்துவிட்ட காலமாக இருப்பதை ஆசிரியர் இந்த வரிகளில் கூறியிருக்கிறாரோ என்றும் நான் எண்ணிப் பார்க்கிறேன்.

இப்படி மூன்று காலங்களையும் கலந்து ஐந்து திருவசனங்களில் ஆசிரியர் கூறியிருப்பது மற்றுமோர் எண்ணத்தை மனதில் எழுப்புகின்றது. நாம் ஒரு கட்டுரை, கவிதை என்று எழுதும்போது, காலம் பற்றிய இலக்கணம் சரியாக உள்ளதா என்று கவனித்து எழுதுவோம். ஆனால், நெருங்கிய ஓர் உறவுக்கு நாம் கடிதம் எழுதும்போது, இலக்கணம் பார்ப்பதில்லை. அதேபோல், நமது எண்ணங்களை, உணர்வுகளை எல்லாம் ஒரு டயரியில் எழுதும்போது இலக்கணப் பிழைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. பல நேரங்களில், உள்ளத்தின் உணர்வுகளை கடிதத்தில் அல்லது டயரியில் கொட்டும்போது நாம் எழுதும் எண்ணங்களே சரியா தவறா என்ற கணக்கெல்லாம் நாம் பார்ப்பதில்லை.
இப்படி எழுதுவதே பல நேரங்களில் நம் மனத்தைக் குணப்படுத்தும் ஒரு மருந்து என்று மனநல மருத்துவர்கள் சொல்லி இருக்கின்றனர். அமெரிக்காவில் 20ம் நூற்றாண்டு வாழ்ந்து, 1998ல் மறைந்த Ira Progoff என்ற ஒரு மனநல மருத்துவர் கண்டுபிடித்த ஓர் அற்புதமான மனநல வழியின் பெயர் the Intensive Journal Method.
Intensive Journal என்ற இந்த மனநல முறைப்படி உள்ளத்தில் எழும் எண்ணங்களை, சிறப்பாக உள்ளத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ள பல சொல்ல முடியாத உணர்வுகளை அப்படியே ஒரு குறிப்பேட்டில் எழுதும்போது, அதுவே நம் உள்ளத்தை குணமாக்கும் வலிமை பெற்றதென்று சொல்லப்படுகிறது. இந்த முறையில் நடத்தப்பட்ட பயிற்சிப் பாசறையை நான் இரு முறை அனுபவித்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன்... இது உண்மை. ஐந்து நாட்கள் நடந்த இந்தப் பாசறையில் நான் குறைந்தது ஐம்பது பக்கங்களாவது எழுதியிருப்பேன். இந்த முறையின் மிக அழகான பகுதி என்னவென்றால், நாம் எழுதுவதை வேறு யாருக்கும் காட்டக்கூடாது என்ற நிபந்தனை. இந்த ஒரு நிபந்தனை எனக்குத் தந்த சுதந்திர உணர்வால் என் மனதில் பட்டதை அப்படியே எழுதினேன். எந்தக் கலப்படமும் இல்லாத அப்பட்டமான உண்மைகளை எழுதினேன். அந்த ஐந்து நாட்கள் நான் எழுதியது எனக்குள் பல தெளிவுகளை உருவாக்கியது. என்னை நானே இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவியது.
திருப்பாடலின் ஆசிரியர் தன் உள்ளத்தின் துயரங்களையெல்லாம் குணமாக்கும் ஒரு முயற்சியாக, இந்த Intensive Journalன் பாணியில் இந்த வரிகளை எழுதியுள்ளதைப் போல் தோன்றுகிறது. துயரத்தின் உச்சியில் இருக்கும் ஓர் உள்ளம், அங்கு எழும் உணர்வுகளைத் தங்கு தடையின்றி கொட்டுவதே ஒரு பெரும் நிம்மதி, அதுவே அந்த உள்ளத்திற்கு குணமளிக்கும் ஒரு வழி என்று சொல்கிறோமே. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது, பல திருப்பாடல்கள் அவற்றை எழுதியவரின் மனத்தைக் குணமாக்கியிருக்க வேண்டும்.

இறைவனைப் பிரிந்ததால், தான் அனுபவித்து வரும் துயரத்தின் ஆழத்தை விவரிக்க திருப்பாடலின் ஆசிரியர் இரு அழகிய உருவகங்களை இப்பாடலின் 7வது மற்றும் 10வது திருவசனங்களில் பயன்படுத்தியுள்ளார். ஒரு உருவகம் தண்ணீரைச் சார்ந்தது. மற்றொரு உருவகம் எலும்பையும் ஊடுருவிச் செல்லும் வாள்.
திருப்பாடல் 42: 7
உம் அருவிகள் இடியென முழங்கிட ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கின்றது: உம் சிற்றலைகளும் பேரலைகளும் என்மீது புரண்டோடுகின்றன.
அருவி, ஆழ்கடல், பேரலை என்று தண்ணீரின் பல வடிவங்கள் சொல்லப்பட்டுள்ளன. உயிரூட்டுதல், தூய்மையாக்குதல் என்று பல நல்ல குணங்கள் தண்ணீருக்கு உண்டு. ஆனால், அதே நீர் நமக்குச் சமாதியை எழுப்பும் சக்தியும் பெற்றது. தலைக்கு மேல் செல்லும் வெள்ளத்தில் மூழ்கி, மூச்சு முட்டும்போது உயிரளிக்கும் தண்ணீர் உயிரை அழிக்கவும் செய்கிறது. கடவுளை இழக்கும் அனுபவம் தண்ணீரில் மூழ்கி, மூச்சுத் திணறி துடிப்பது போன்ற ஓர் உணர்வு என்பதை திருப்பாடல் 42: 7ல் நாம் கேட்ட இந்த வரி சொல்கின்றது. இதே எண்ணங்களை இறைவாக்கினர் யோனாவும் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை சொல்லியிருப்பதைக் காணலாம். யோனாவும் இறைவனை விட்டு விலகிச் செல்கிறார். அந்நேரத்தில் அவரை ஒரு பெரிய மீன் விழுங்கி விடுகிறது. அந்த மீன் வயிற்றில் இருந்தபடியே யோனா இந்த வரிகளைச் சொன்னதாக நாம் வாசிக்கிறோம்:

யோனா 2 : 3-5
யோனா அந்த மீன் வயிற்றில் இருந்தவாறு, தம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடலானார்: நடுக் கடலின் ஆழத்திற்குள் என்னைத் தள்ளினீர்: தண்ணீர்ப் பெருக்கு என்னைச் சூழந்துகொண்டது. நீர் அனுப்பிய அலை திரை எல்லாம் என்மீது புரண்டு கடந்து சென்றன. அப்பொழுது நான், உமது முன்னிலையிலிருந்து புறம்பே தள்ளப்பட்டேன்; இனி எவ்வாறு உமது கோவிலைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டேன். மூச்சுத் திணறும்படி தண்ணீர் என்னை அழுத்திற்று: ஆழ்கடல் என்னைச் சூழ்ந்தது: கடற்பாசி என் தலையைச் சுற்றிக் கொண்டது.

7ம் திருவசனத்தில் தண்ணீரைப் பற்றிய உருவகத்தைப் பயன்படுத்திய ஆசிரியர், 10ம் திருவசனத்தில் மற்றொரு உருவகத்தைக் குறிப்பிடுகிறார். 'உன் கடவுள் எங்கே?' என்று பிறர் கேட்ட அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் திருப்பாடலின் ஆசிரியரை துயரத்தின் உச்சிக்குக் கொண்டு சென்ற வார்த்தைகள். இந்தத் துயரத்தின் உச்சியை விவரிக்க அவர் 10வது திருவசனத்தில் பயன்படுத்தும் ஓர் உருவகம் 'என் எலும்புகளை ஊடுருவும் வாள்'. சதையை ஊடுருவ ஒரு சிறு ஊசி, அல்லது கத்தி போதும். எலும்பை ஊடுருவ மிகவும் கூர்மையான, உறுதியான வாள் தேவைப்படும். கத்தி சதையை ஊடுருவும்போது வலி இருக்கும். ஆனால், வாளொன்று எலும்பை ஊடுருவும்போது இந்த வலி பல மடங்காக உயரும்.
கடவுளை இழந்ததால், தான் அனுபவித்து வரும் துன்பம் மிகக் கொடூரமானது என்பதைக் கூற ஆசிரியர் பயன்படுத்தியுள்ள இந்த உருவகம் மிக ஆழமானது. இந்தத் துயரங்களிலிருந்து திருப்பாடல் ஆசிரியர் மீள்வதற்கு வழி உண்டா? தொடர்ந்து நாம் திருப்பாடல் 42, 43களில் நம் தேடலைத் தொடர்வோம்.








All the contents on this site are copyrighted ©.