2011-06-13 15:59:38

வாரம் ஓர் அலசல் – வாரீர் வரலாறு படைக்க!


ஜூன்13,2011. கடந்த ஏப்ரலில் நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தொடர்புடைய நடவடிக்கைகளில், ஒரு முப்பது வயது இளைஞரை "மதுரையில் பதட்டம் தணித்தவர்” என்று பாராட்டியிருந்த செய்தியை கடந்த ஏப்ரல் 19ம் தேதி நாளிதழ் ஒன்றில் வாசித்தோம். மதுரை மாநகரில் தேர்தல் சம்பந்தப்பட்ட வேலைகளைக் கவனிக்கப் பதட்டம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அந்தப் பதட்டத்தைக் குறைப்பதற்குக் காரணமாக இருந்தவர் 30 வயதே ஆன "ஆஸ்ரா கர்க்' இளைஞர்தான். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆஸ்ரா கர்க், எலக்ட்ரானிக் பொறியியல் படித்தவர். தனது 28வது வயதில் திருநெல்வேலி எஸ்.பி.,யாக 2008ல் நியமிக்கப்பட்டார். அங்கு பணியில் இருந்தபோது கூலிப்படைக் கும்பல், மாமூல் வசூலிக்கும் ரவுடிகள், தாதாக்களின் பட்டியலைத் தயாரித்து ரவுடியிசம் மற்றும் கட்டப்பஞ்சாயத்துக்களை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்தார். போதை மருந்து கடத்தல் கும்பல் மற்றும் ரவுடிகள், "குண்டர்' தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, மதுரை எஸ்.பி.,யாக கடந்த மார்ச் 22ல் பொறுப்பேற்றார். கமிஷனராக பொறுப்பேற்றதுடன், தனது கைபேசி எண்ணை வெளியிட்டு, "புகார் தொடர்பாக யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் என்னிடம் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்' என அறிவித்தார். இதன் விளைவு தினமும் 150 தொலைபேசி அழைப்புகள். அத்தனைக்கும் பதிலளித்து, புகார் மீது தேவையான நடவடிக்கை எடுத்ததோடு சட்டம் ஒழுங்கிலும் கவனம் செலுத்தினார் என்று அச்செய்தியில் இருந்தது.
இந்த 2011ம் ஆண்டைத் திருப்பூரைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒரு வித்தியாசமான முறையில் கொண்டாடினார்கள் என்பதையும் தினத்தாளில் வாசித்து மகிழ்ந்தோம். திண்டுக்கலில் சுற்றித் திரிந்த மனநோயாளிகள், கைவிடப்பட்டோர் ஆகியோரைக் கண்டுபிடித்து அவர்களுக்கு முடிவெட்டி புத்தாடை கொடுத்து உணவளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் “நியூ தெய்வா சிட்டி ஹேர் ஆர்ட்ஸ் டிரஸ்ட்” என்ற அமைப்பினர் இந்த நல்ல பணியினைச் செய்துள்ளனர். “ஆதரவற்ற சிறார், தாய் தந்தை இல்லாதவர்கள், காதுகேளாதோர், கண்பார்வை இல்லாதவர்கள், வாய்பேச இயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள், முதியோர் இல்லங்களில் வயதானவர்கள், தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பலருக்குக் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த அமைப்பினர் முடிதிருத்தம் செய்து வருகின்றனர். திருப்பூர் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலும் இப்பணியைச் செய்து வருகின்றனர். 15 நாட்கள் கடைகளில் வேலை செய்து விட்டு மீதி நாட்களில் இத்தகையப் பணிகளைச் செய்வதாக” இந்த அமைப்பின் தலைவர் தெய்வராஜ் கூறியதாகத் தினத்தாளில் வாசித்தோம். தொண்டு ஆர்வமுள்ள இளைஞர்கள் பத்துப் பேர் இதனைச் செய்து வருவதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.
தங்களையொத்த வயதுடையோர்க்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகச் செயல்படும் தொண்டுள்ளம் படைத்த இத்தகைய இளையோர், எல்லாரின் நெஞ்சார்ந்த பாராட்டை, சிறப்பாக இந்த இளையோர் ஆண்டில் மிகுந்தப் பாராட்டைப் பெற வேண்டியவர்கள். ஐக்கிய நாடுகள் நிறுவனம் 1985ம் ஆண்டு அனைத்துலக இளையோர் ஆண்டைச் சிறப்பித்தது. அதன் 25வது ஆண்டின் நிறைவாக, இந்த நிறுவனம் சென்ற 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதியன்று உலக இளையோர் ஆண்டைத் தொடங்கியது. “உரையாடலும் ஒருவர் ஒருவரைப் புரிந்து கொள்ளுதலும்” என்ற தலைப்பில் கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த இளையோர் ஆண்டு, இந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதியோடு நிறைவடைகின்றது. தமிழகத்தில் துறவு சபைகள் உட்பட பல பன்னாட்டு அமைப்புகள் இளையோர்க்குப் பல நிகழ்ச்சிகளை நடத்தி இந்த ஆண்டைச் சிறப்பித்து வருகின்றன. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் வருகிற ஆகஸ்டு 15 முதல் 21 வரை ஸ்பெயின் நாட்டு மத்ரித்தில் நடைபெறவிருக்கும் உலக கத்தோலிக்க இளையோர் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார். எங்கெல்லாம் இளையோரைச் சந்திக்கிறாரோ அங்கெல்லாம் நாம் மத்ரித்தில் சந்திப்போம் என அவர்களுக்கு அழைப்பு விடுத்தும் வருகிறார்.
அன்பர்களே, இளையோர் என்று சொன்னாலே அவர்கள் எழுச்சி மிக்கவர்கள், ஏற்றம் கொண்டவர்கள் என்பது புரியும். அவர்களின் சக்திக்கு முன்னால் அனைத்தும் பின்வாங்கும் என்றே வரலாற்று நிகழ்வுகள் கூறுகின்றன. சீனாவில் 1989ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி “தியானமென்” வளாகத்தில் இடம்பெற்ற சனநாயக ஆதரவு சீன இளையோர் எழுச்சியை யாரும் எளிதில் மறக்க முடியாது. உலகில் இளையோர் பலர் வாழ்க்கையில் ஏமாற்றம், விரக்தி, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகளையும் எதிர்நோக்குகின்றனர். இன்று உலகில் 18க்கும் 24 வயதுக்கும் உட்பட்ட இளையோரில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே முழுநேரப் பணியாளர்களாக வேலை செய்கின்றனர். பத்து பேருக்கு நான்கு பேர் வீதம் வேலை இல்லாமல் இருக்கின்றனர்ர். இந்தியாவில் பாரம்பரியக் குடும்பக் கவுரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் “கௌரவக் கொலை”களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஆயிரம் இளையோர் வீதம் பலியாகின்றனர். கடந்த ஏப்ரல் 21ம் தேதி வெளியான தகவலின்படி, பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணங்களை ஏற்காதவர்கள், குடும்பங்கள் தேர்ந்தெடுக்கும் பெண்ணையோ அல்லது மாப்பிள்ளையையோ திருமணம் செய்ய மறுக்கும் இளையோர் இவ்வாறான “வெட்கத்துக்குரிய மற்றும் கொடுமையான” கௌரவக் கொலைச் செயலுக்கு உள்ளாகின்றனர். ஹரியானா, பஞ்சாப், இராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற இந்தியாவின் வடமாநிலங்களில் இந்தக் கௌரவக் கொலைகள் அதிகம் எனவும் பெற்றோர்களைவிட இளைஞிகளின் சகோதரர்களே இக்கொலைகளை அதிகம் செய்வதாகவும் செய்தியில் கொடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான நடவடிக்கைகளால் ஆண்டுதோறும் சுமார் ஆறு இலட்சம் கருக்கள் கலைக்கப்படுகின்றன என்றும் வாசித்தோம். எனவே இந்திய உச்சநீதிமன்றமும் இதனைத் தடுத்து நிறுத்த மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆணைபிறப்பித்துள்ளது.
இன்றைய உலகம், நாளைய உலகின் தலைவர்களை அதிகம் நம்பியிருக்கின்றது. அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குக் கத்தோலிக்கத் திருச்சபை உட்பட பல பன்னாட்டு அமைப்புகளும் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. இலங்கையின் போருக்குப் பின்னான சூழலைக் குறிப்பிட்ட ஒரு சமூக ஆர்வலர், நம் இளைஞர் சமுதாயம் நாளைய சரித்திரம் படைக்குமா? என்ற கேள்வியை ஆதங்கத்தோடு கேட்டுள்ளார். இளைஞர் சமுதாயத்தின் பெரும்பான்மையான முன்னாள் போராளிகள் இன்று சிறைகளில். இவர்களில் பெண் போராளிகளின் சிறை வாழ்வு மிகக் கொடியது. அவர்கள் தம் இளமை வாழ்வை அங்கு நடந்த பெரும் போருக்கு அர்ப்பணித்தவர்கள். அவ்வகையில் இலங்கைத் தமிழ் இளையோரிடம் அவர் ஓர் அன்பு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
அன்புக்குரிய இளைஞர்களே! நீங்கள் முதலில் உங்களை அறிய வேண்டும். சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் உங்கள் வாழ்க்கை என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும். இதற்காக ஒட்டு மொத்த இளைஞர் சமுதாயமும் அப்படி இல்லை. நீங்கள் சுவாமி விவேகானந்தர் காட்டிய இளைஞர்களாக மாறவேண்டும். அகிம்சைப் பாதையில் அறிவெனும் ஆயுதத்தோடு அரசியல் களத்தில் குதியுங்கள். சிறு பொறி பெரும் காட்டுத் தீயை மூட்டும்!
இளையோரே, நீங்கள் வரலாறு படைக்க வேண்டியவர்கள். வரலாற்றைப் படைக்க வேண்டியவர்கள். “இராமன் விளைவுக்காக” நொபெல் விருது பெற்ற அறிவியல் அறிஞர் சர்.சி.வி.இராமன், இவ்விருதைப் பெறுவதற்காக வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார். அப் போது அவருக்கு ஒரு பெரிய பாராட்டு விழா நடந்தது. அந்த விருந்தில் வெளிநாட்டவர் வழக்கப்படி மதுபானம் பரிமாறப்பட்டது. சர்.சி.வி.இராமனோ அதைப் பரிமாறியவர்களிடம், “என்னை மன்னிக்கவும், மதுபானத்தில் இராமன் விளைவைப் பார்ப்பதில்தான் எனக்கு ஆர்வமே தவிர இராமனில் மதுவின் விளைவைப் பார்ப்பதில் விருப்பம் இல்லை” என்று கூறி மது அருந்துவதை நாசுக்காகத் தவிர்த்து விட்டாராம்.
எம் வாஞ்சைக்குரிய இளையோரே, எந்தச் சூழ்நிலையிலும் நல்ல பழக்கங்களைக் கைவிடாத தன்மையில்தான் சுயகட்டுப்பாடு அமைந்துள்ளது. வசதிகளும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்ற போது சிலரைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களது உடலை அசுத்தம் செய்யத் தேவையில்லை. இன்று படித்த இளையோர் சிலர் தொழில் மையங்களில் இரவு முழுவதும் கணனியோடு போராடிவிட்டு பகலில் வேறு எங்கோ செல்வதாகச் செய்திகள் வருகின்றன. அண்மையில்கூட சென்னையில் பேருந்து தினத்தைக் கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய விதம் பற்றி வாசித்து கவலை அடைந்தோம். நம் இளையோர் உலகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? இளையோரே, உங்கள் பெற்றோர் உங்களை நினைத்து நினைத்து கவலைப்படுவதை உணருகின்றீர்களா?
வாழ்க்கைப் பாதையில் இலட்சியக் கனவில் முன்னேறுவற்கு ஊக்கம் முக்கியமானது. இந்த ஊக்கம் மட்டுமே மனிதனின் நிலையான உடைமை. தாமரை மலரானது நீரின் மட்டத்திற்கு ஏற்ப உயர்வது போல ஊக்கத்தின் அளவுக்கேற்பதான் வாழ்க்கை உயரும். ஒருசமயம் மெய்யிலாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரையாற்றி முடிந்ததும் ஓர் இளைஞன் எழுந்து அவரிடம், ஐயா, நான் என் பெற்றோர் சொன்னபடி படித்தேன். அவர்கள் சொன்ன வேலையில் இருக்கிறேன். அவர்கள் பார்த்தப் பெண்ணை மணந்து கொண்டேன். ஆக, என் வாழ்க்கையில் எல்லாமே பிறரது விருப்பப்படிதான் நடக்கிறது. ஆனால் சிறுவயது முதற்கொண்டு சிறந்த ஓவியனாக வேண்டுமென்று விரும்பினேன். ஆனால் இதுவரை அந்த ஆவல் நிறைவேறவில்லை, இனியாவது அதை நிறைவேற்ற வேண்டும், அதற்கு என்ன வழி என்று கேட்டான். அதற்கு கிருஷ்ணமூர்த்தி, நீ சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் உனது பெற்றோரின் அனுமதியை எதிர்பார்த்தது உண்டா? பசித்த போது விரும்பியதை உண்டவன் நீ. உறக்கம் வரும்போது யாரிடமும் அனுமதி கேட்காமல் தூங்கியவன் நீ. ஓவியனாக வேண்டுமென்ற உந்துதல் உண்மையிலே உன்னிடம் இருந்திருந்தால் இந்நேரம் நீ அவ்வாறு ஆகியிருக்க முடியும். எனவே அடுத்தவர் மீது பழிபோடுவது சரியல்ல என்றார். அவர் சொன்னதற்கு அவ்விளைஞனால் மறுப்புச் சொல்ல முடியாமல் தனது இருக்கையில் அமர்ந்தான்.
ஆம். இளையோரே, என்னால் முடியுமா என்ற அவநம்பிக்கைப் பள்ளத்தில் மனதைத் தடுமாற விடாமல் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்து உலகில் புகழ் உச்சியில் ஏறுங்கள். வரலாறு படையுங்கள். நாளைய உலகம் உங்கள் கைகளில். தன்னில் இருந்த மலர்கள் உதிர்ந்து விட்டாலும் அவை மறுபடியும் மலரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் செடி போல வாழ்க்கையில் தன்னம்பிக்கையை மட்டும் தளர விடாதீர்கள்








All the contents on this site are copyrighted ©.