2011-06-13 15:48:48

வர்த்தக உலகம் கடைபிடிக்க வேண்டிய நன்னெறியை மையமாகக் கொண்டு வத்திக்கானில் கருத்தரங்கு நடைபெறும்


ஜூன் 13,2011. தற்போதுள்ள நிலையிலேயே நின்று விடாமல், எப்போதும் உயர்வை நோக்கிச் செல்வதே திருச்சபையின் பயணம் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூன் 16 மற்றும் 17, வருகிற வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வர்த்தக உலகம் கடைபிடிக்க வேண்டிய நன்னெறியை மையமாகக் கொண்டு வத்திக்கானில் நடைபெற உள்ள ஒரு கருத்தரங்கைப் பற்றிப் பேசிய கருத்தரங்கின் தலைவரும், திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் தலைவருமான கர்தினால் பீட்டர் டர்க்சன் இவ்வாறு கூறினார்.
உலகின் பல நாடுகளிலிருந்தும் பல வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் வத்திக்கான் அழைப்பின் பேரில் இக்கருத்தரங்கில் கலந்து கொள்வர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 2009ம் ஆண்டு வெளியிட்ட 'Caritas in Veritate' என்று சுற்றுமடலை மையப்படுத்தி இக்கருத்தரங்கின் விவாதங்கள் நடைபெறும் என்று கர்தினால் டர்க்சன் சுட்டிக் காட்டினார்.
வர்த்தக உலகம் திருச்சபையிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு, பாடங்கள் பல உள்ளன என்றும், திறந்த மனதோடு திருச்சபையின் படிப்பினைகளை ஏற்றுக் கொண்டால், வர்த்தக உலகம் பெரிதும் பயனடையும் என்பதை நான் நம்புவதாகவும் திருப்பீட அதிகாரி கர்தினால் டர்க்சன் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.