2011-06-13 15:48:35

திருத்தந்தை: இரத்த தானம் புரிவோரை இளைஞர்கள் பின்பற்றட்டும்


ஜூன் 13,2011. நாத்ஸி வதைப்போர் முகாமில் பலியாகி, இத்திங்களன்று ஜெர்மனியில் அருளாளராக உயர்த்தப்பட்ட இளம் குரு Alois Andritzki குறித்து தன் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த விசுவாச சாட்சியத்தை உலக அமைதிக்கென அர்ப்பணிப்பதாகக் கூறினார்.
நாத்சி ஆட்சியை எதிர்த்ததற்காகவும், இளையோரிடையேயான பணிக்காகவும் விஷ ஊசி மூலம் 1943ம் ஆண்டுக் கொல்லப்பட்ட 28 வயது குரு ஆன்ட்ரிட்சிகியின் எடுத்துக்காட்டை விசுவாசிகளுக்கு முன்வைத்த திருத்தந்தை, அமைதிக்கான உறுதி நிறை பரிந்துரைகளை எடுத்துச் செல்லவும், ஆயதங்களின் இடத்தை பேச்சுவார்த்தைகள் பிடிக்கவும், சுயநலங்களை விட மனித மாண்புக்கு முக்கியத்துவம் வழங்கவும் தூய ஆவி நம்மைத் தூண்டுவாராக எனவும் வேண்டினார்.
இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்படும் உலக இரத்த தான நாள் குறித்தும் எடுத்தியம்பிய பாப்பிறை, துன்பத்திலிருக்கும் சகோதரர்களுக்கு அமைதியான வழியில் உதவும் இரத்ததானம் செய்வோரை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
உலக நல அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வோர் ஆண்டும் 9 கோடியே 20 இலட்சம் மக்கள் இரத்த தானம் செய்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.