2011-06-11 16:52:55

எய்ட்ஸ் நோயாளிகளிடையே ஆற்றப்படும் மொத்தப் பணிகளுள் 25 விழுக்காடு கத்தோலிக்கத் திருச்சபையால் மேற்கொள்ளப்படுகிறது


ஜூன் 11,2011. இவ்வுலகில் எயிட்ஸ் நோய்க்கிருமி பாதிப்பாளர்கள், மற்றும் எய்ட்ஸ் நோயுற்றோரிடையே ஆற்றப்படும் மொத்தப்பணிகளுள் 25 விழுக்காடு கத்தோலிக்கத் திருச்சபையால் மேற்கொள்ளப்படுவதாக ஐ,.நா. கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
எயிட்ஸ் நோய் குறித்த ஐ.நா. கருத்தரங்கின் இறுதி நாள் கூட்டத்தில், ஐநாவிற்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட்டின் சார்பில் உரைநிகழ்த்திய திருப்பீடக்குழுவின் உறுப்பினர் பேராசிரியை Jane Adolphe, எயிட்ஸ் நோயுற்றோரிடையே மேற்கொள்ளப்படும் பணிக்கென உலகம் முழுவதும் 1 இலட்சத்து 17 ஆயிரம் நல மையங்கள் மூலம் கத்தோலிக்கத் திருச்சபை மகக்களிடையே, குறிப்பாக சிறார்களிடையே பணியாற்றி வருகிறது என்றார்.
திருமணத்திற்கு முன்னும் திருமணத்திற்கு வெளியேயும் உடலுறவுகளில் ஈடுபடாமை, பொறுப்பற்ற நடவடிக்கைகளைக் கைக்கொள்ளாமை, நோய்க்கெதிரான மருந்துக்கள் கிடைக்க ஊக்கமளித்தல் போன்ற கொள்கைகளை வலியுறுத்தி கத்தோலிக்கத் திருச்சபை பணிபுரிந்து வருவதாகக் கூறினார் அவர்.
ஏழை நாடுகளில் HIV கிருமிகளுடன் வாழும் 1 கோடியே 50 இலட்சம் மக்களுள் 52 இலட்சம் பேருக்கே மருந்துக்கள் கிடைப்பதாக உரைத்த திருப்பீடக்குழுவின் உறுப்பினர் Adolphe, எயிட்ஸ் நோயால் அனாதைகளான சிறார்கள் 1 கோடியே 60 இலட்சம் பேர் இவ்வுலகில் வாழ்வதாகவும் கவலையை வெளியிட்டு, சர்வதேச சமுதாயத்தின் அக்கறைக்கும் அழைப்பு விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.