2011-06-10 14:42:08

வங்காள அரசுக்கும் கூர்க்கா அமைப்பினருக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் நம்பிக்கையை விதைத்துள்ளது - தலத்திருச்சபை


ஜூன் 10,2011. இந்தியாவில் வங்காள அரசுக்கும் கூர்க்கா அமைப்பினருக்கும் இடையே இச்செவ்வாயன்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் அப்பகுதியில் புதியதொரு நம்பிக்கையை விதைத்துள்ளதென்று தலத்திருச்சபை கூறியுள்ளது.
டார்ஜீலிங் மலைப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாய் அமைதியைக் குலைத்து வரும் பல பிரச்சனைகள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தீர்க்கப்படும் என்று தான் நம்புவதாக டார்ஜீலிங் மறைமாவட்டத்தின் செய்தித் தொடர்பாளரான அருள்தந்தை Alexander Gurung கூறினார்.
34 ஆண்டுகளாய் வங்காளத்தை ஆட்சி செய்த மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்தலில் வென்று முதலமைச்சராய் பொறுப்பேற்றுள்ள மம்தா பானர்ஜி, பதவியேற்ற 17 நாட்களில் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளார் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சுற்றுலாவுக்கென புகழ் பெற்றிருந்த டார்ஜீலிங் கடந்த பல ஆண்டுகளாய் அமைதி குலைந்து இருந்ததால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து, அங்கு வாழும் மக்களின் பொருளாதார நிலையும் சரிந்திருந்தது என்பதைச் சுட்டிக் காட்டிய அருள்தந்தை Gurung, இனியாகிலும் சுயநலத்தில் நாட்டம் கொண்ட அரசியல்வாதிகளால் தங்கள் பகுதி பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டார்.
டார்ஜீலிங் பகுதியில் பெரும்பான்மையினராய் இருக்கும் கூர்க்கா அமைப்பினர் தங்களுக்குத் தனி மாநிலம் வேண்டும் என்று 2007ம் ஆண்டு முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.








All the contents on this site are copyrighted ©.