2011-06-09 15:43:37

லண்டன் பேராலயத்தில் இந்திய தலித் மக்களை மையப்படுத்திய புகைப்படக் கண்காட்சி


ஜூன் 09,2011. இந்திய தலித் மக்களை மையப்படுத்திய ஒரு புகைப்படக் கண்காட்சி லண்டன் புனித பவுல் பேராலயத்தில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.
உலகளாவிய கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு என்ற ஓர் அமைப்பிற்கென Marcus Perkins என்ற புகைப்படத் திறமையாளர் எடுத்த புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற உள்ளன.
இந்தியாவில் உள்ள சாதீய அமைப்பு முறையை உலகம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று கூறிய Perkins, இந்தியா தற்போது பொருளாதாரத்தில் முன்னேறி வரும் ஒரு நாடாக இருப்பதால், அங்கு சாதீய முறைகள் இல்லை என்று உலகம் எண்ணி வருகிறதென்றும் அந்த எண்ணம் தவறானதென்பதை இந்தப் புகைப்படங்கள் சுட்டிக் காட்டும் என்றும் கூறினார்.
இந்தியச் சட்டங்களின்படி 'தீண்டாமை' என்பது ஒரு குற்றம் என்றாலும், அது அந்நாட்டில் இன்னும் நடைமுறையில் உள்ளதென்று Perkins வலியுறுத்திக் கூறினார்.
ஜூன் 14 முதல் ஜூலை 6 வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியின்போது, ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும் இதே கருத்திற்காக ஒப்புக்கொடுக்கப்படும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.