2011-06-09 15:31:43

ஜூன் 10 வாழ்ந்தவர் வழியில்...


'வேதி' என்று அழைக்கப்படும் வே.தில்லைநாயகம் தமிழக நூலகத்துறையின் முன்னோடியாக, தமிழக நூலகத்துறையின் பிதாமகனாகக் கருதப்படுகிறார். இவர் மதுரை மாவட்ட சின்னமனூரில் 1925ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இன்னும் சென்னை, தில்லி, நாக்பூர், மதுரை முதலிய பல்கலைக்கழகங்களின் மாணவர். நூலகவியல், பொருளாதாரயியல், கல்வியியல் போன்ற துறைகளில் அதிக கவனத்தைச் செலுத்தியவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகள் தெரிந்தவர். மாணவப் பருவத்திலேயே நூலகத் தொடர்பு பெற்றவர். 1949ல் அரசுச் செலவில் நூலகப் பயிற்சி பெற்றார். 1962ல் பொதுநூலக கல்வித்துறை இயக்க முதல் நூலகராகப் பணியில் அமர்ந்தார். 1972ல் கன்னிமாராப் பொது நூலகத்தின் முதல் தொழில் நூலகரும் ஆனார். சுதந்திர இந்தியாவில் பத்து ஆண்டுகள் ஒரு துறையின் இயக்குனராகத் தொடர்ந்து இருந்தவர் இவர் ஒருவரே. தேசிய மற்றும் மாநில பல்கலைக்கழக நூலக குழுக்களில் உறுப்பினர். இவர் பணியில் இருந்த காலத்தில் நூலக இயக்கத்தின் பண்பும், பயனும் என்றும் இல்லாத அளவுக்கு உயர்ந்த வீச்சினைப் பெற்றிருந்ததாகவும் அக்காலம் தமிழக நூலக இயக்கத்தின் பொற்காலம் எனவும் நூல்சார்ந்த எல்லோரும் இவரைப் புகழ்ந்துள்ளார்கள். இவரைத் தமிழக நூலக இயக்கத்தின் முன்னோடி என்றும் தந்தை என்றும் அழைக்கலாம். இவர் இந்திய நூலகத்துறை முன்னோடியான அரங்கநாதனின் மாணவர்.
ஏறத்தாழ 1000 எழுத்துரைகள் எழுதியவர். இதில் 101, ஆங்கில எழுத்துரைகள் ஆகும். இதில் சில இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளில் மொழி மாற்றம் பெற்றுள்ளன.
இந்தியாவின் முன்னோடி முயற்சியாக தமிழில் 1951 முதல் 1982 வரை இவர் பதிப்பித்த நூற்றொகைகள், குழந்தை நூற்றொகைகள், நூல்கள் அறிமுக விழா மலர்கள் முதலியன புகழ் பெற்றவை. “வேதியம் 1008” என்ற நூல் உட்பட இவர் எழுதிய 25 நூல்கள் இந்தியத் தர நிர்ணயத் தரங்கள் கொண்டவை. இவர் எழுதிய நூலக உணர்வு (1971), வள்ளல்கள் வரலாறு (1975), இந்திய நூலக இயக்கம் (1978) முதலியன தமிழ்நாடு அரசின் முதல் பரிசு பெற்றவை."இந்திய நூலக இயக்கம்" என்ற நூலைப் பாராட்டி 1982ல் உலகப் பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம் அளித்தது. "இந்திய அரசமைப்பு" என்ற நூல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பரிசினைப் பெற்றது.








All the contents on this site are copyrighted ©.